வெள்ளி, 26 ஜூலை, 2013

முக(மற்ற) நூல்

           துவக்கம்:   முகநூல் - Face  Book - என்ன அழகான பெயர்; அதில் தான் என்ன அருமையான பயன் தெரியுமா?   எனக்கு முதலில் முகநூல் பற்றி அதன் பயன்பாடுகள் பற்றி பெயரளவுக்கே தான் தெரிந்திருந்தது. பின்னர், மறைந்த எனது சகோதரரின் மகன் திலீப்குமார் தான் மடிக்கணினி மூலம் எனக்கு முகநூல் பற்றிய சில விவரங்களைச் சொன்னதோடு, அதனுள் நுழைவதற்கான வழிமுறைகளையும் சொன்னார். அதன்படி நானும் எனக்கென்று ஒரு முகநூல் பதிவொன்றை துவக்கிக்கொண்டேன்-தமிழில்.

          நண்பர்கள்:   மெல்ல மெல்ல முகநூலில் நன்றாக நுழைந்தபின் முதல்முதலாக சசிகுமார் என்பவரை நண்பனாக்கிக் கொண்டேன்; பின்பு பல எழுத்தாளர்களையும் சமூக கருத்தாளர்களையும் நானே கோரிக்கை கொடுத்து நட்பாளர்களாக இணைத்துக் கொண்டேன். இதில் எனது ஆசான் திரு.தமிழருவி மணியன், சிறந்த இதழாளர் செ.ச.செந்தில்நாதன், இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதன் மற்றும் பல சிறந்த பதிவர்களைப் பெற்றுள்ளேன்!

         விருப்பம்,கருத்து, பகிர்தல்:   இவ்வட்டத்தில் நான் முதலில் மற்றவர்களின் பதிவுகள் பிடித்திருந்தால் மட்டுமே விருப்பம்(like) தெரிவிப்பேன்;எல்லாவற்றுக்கும் அல்ல! அப்போது சில பதிவுகள் நாம் ஆதரிக்கும்படியும் அல்லது எதிர்க்கும்படியும் மேலும் நல்ல தூண்டுதல்களைத் தரும்படியும் வந்து இருக்கும்; அதைப்பார்த்து நானும் கருத்துகளைச் சொல்லத் துவங்கினேன்! மற்றவர்களின் கருத்துகளோ,படங்களோ விருப்பத்தின்பேரில் பகிரத்துவங்கினேன்.
                           
                    சரி! இனி சொல்லவந்த செய்திக்கு வருவோம்! ஐயா! நாம் மேடைபேச்சு நாகரீகங்களைத்  தொலைத்து பல வருடங்களாகிவிட்டன! எட்டிக்காய் போல கசக்கிறது - எதிக்கட்சிகளின் நல்ல கருத்துகள்கூட, யாருடைய அரசாக இருந்தாலும்! அடச்சீ! இந்த அரசியல் வேண்டாமடா சாமி என்று இலக்கியத்திற்குப் போனால், அடப்பாவிகளா! அவர்களாவது மேடையில் ஏசிவிட்டுச் சென்றுவிடுவார்கள்! இந்த இலக்கியவாதி எதிரே அமர்ந்திருக்கும் போதே அடுத்தவனின் மனைவியை இழுக்கிறான்! இவர்களது பல கலந்துரையாடல்களும் புத்தக வெளியீடு
 ஆகியவைகளும் நாற்காலிப் பறிமாறல்களுடனும், செருப்பு அர்ச்சனைகளுடனும், புத்தக கிழித்தலுடனும், இவனது தாய் சொல்லித்தான் தனது தகப்பனை இவன் அறிந்தான் என்பது தெரிந்தும் அடுத்தவனின் தாயைத் தவறாகப் பேசுவதுடனும் தான் முடியும்! சரி,தொலைகிறது என்ற எண்ணத்துடன் தொலைக்காட்சியின் முன் அமர்ந்தால் அங்கே இன்னும் மோசம்! விவாதம் எனும் பெயரில்  அரசியல்,இலக்கியம் உட்பட மேலும் பல துறைகளிலிருந்து வந்த வித்தகர்களும் சேர்ந்து ஒரே நேரத்தில், இழவு வீட்டில் வந்தவர்கள் அழுகிறபோது கூர்ந்து கவனித்தால் ஒவ்வொருவரும் இழவுக்கு வந்திருக்கும் வீட்டை மறந்துவிட்டு, தங்கள் வீடுகளில் ஏற்கனவே நடந்த ஒரு முக்கிய மரணத்தை சொல்லிச் சொல்லி அழுது கொண்டிருப்பார்களே அதுபோல அவரவர் கருத்தை வலியுறுத்தி மட்டுமே கத்திக் கொண்டிருப்பார்கள். இப்போதெல்லாம் பலர் நடுநிலைப் பத்திரிகையாளர் மற்றும் இலக்கியவாதி என்ற பெயரில், தான் விரும்புகிற கட்சிக்கு மக்கள் தொடர்பு அதிகாரியாக தொலைக்காட்சிகளில் கதைக்கிறார்கள்; கூலிக்கு வேலை செய்கிறார்கள். என்ன தான் செய்வது?

        இனி நிம்மதியாக முகநூலில் உள்ள பதிவுகளுக்கு விருப்பமோ,கருத்தோ சொல்லிவிட்டு இருப்போம் என்றால், அங்கும் சில சொம்படி சித்தர்கள் தங்கள் வேலையைக் காட்டத் துவங்கிவிட்டனர்! இங்கு வரும் பதிவுகளுக்கு ஒன்றும் தெரியாமலே கருத்துச் சொல்ல ஒரு கூட்டம் என்றால், எனக்கு மட்டுமே எல்லாம் தெரியும், நான் சொல்வதை நீ எதிர்த்து எழுதினால் தனது நட்பு வட்டத்திலிருந்தே நீக்கும் ஒரு கூட்டம். பதிவாளன் மாற்றுத்திறனாளி என்றால் அவனது உடற்குறையைச் சுட்டி பழிக்கும் ஒரு கூட்டம் எனில், தனது மாற்றுத்திறனாளி என்கிற தகுதியைக்கொண்டே தன் தவறுகளுக்கு பாதுகாப்புத் தேடும் ஒரு கூட்டம். தான் சொல்லும் கருத்து எங்கே தவறாகிவிடுமோ என்ற அச்சத்தினாலோ,அல்லது யாரையாவது திட்டுவதற்காகவோ மறைபெயர் வைத்துப் பதிவிடும் ஒரு கூட்டம். காதலுக்காக ஒரு கூட்டம்; இழந்த காதலுக்காக ஒரு கூட்டம். ஆண்களை ஈர்க்க ஒரு பெண்கள் கூட்டம்; பெண்கள் பெயரில் ஆண்கள் பதிவிடும்போது வழியுமே ஒரு கூட்டம்.

       சமர்ப்பணம்:   இலக்கியச் சிற்றிதழ் நடுநிலை எழுத்து என்றெல்லாம் சொல்லி பத்திரிகை நடத்திவந்து அதில் பல நல்ல எழுத்தாளர்களை வாசகர்கள் அறியும்வண்ணம் செய்துவிட்டு, தானும் சில நல்ல கட்டுரைகளையும் கவிதைகளையும் வழங்கிவிட்டு, இன்று தனக்கு ஏற்பட்ட பணச்சரிவோ இல்லை மனச்சரிவோ, எதன்பொருட்டோ மனம் மாறி, சக எழுத்தாளர்களில் சிலரைத் தனக்கு வேண்டப்பட்ட கட்சிக்கு ஆதரவாக எழுதவைப்பது, சக எழுத்தாளர்களை ஒருவருடன் ஒருவர் மோதலில் வைத்திருப்பது, எந்தக் கருத்துகளை முன் வைத்து எழுதுகிறோமோ,அதற்கு முரணாக குறிப்பிட்ட கட்சிக்கு மக்கள் தொடர்பு வேலை செய்வது,விளம்பரக் கவிதை வாசிப்பது, தன் கருத்தை எதிர்த்தால் முகநூல் பக்கத்திலிருந்து நீக்குவது, மதச்சார்பு அற்றவர்போல் நடிப்பது, தன்னைப் பின் தொடர்ந்த வாசகர்களை நட்டாற்றில் விட்டது என்பது போன்ற பல முகங்களைக் கொண்ட உயிர்மை: மனுஷ்யபுத்திரனுக்கு இந்தப்பதிவு சமர்ப்பணம்!                            

செவ்வாய், 23 ஜூலை, 2013

படித்ததில் ஒன்று

முற்றாத இரவொன்றில்
திரு. மா.காமுத்துரை அவர்களின் முற்றாத இரவொன்றில் நாவலை 5.9.2012 அன்று வாசித்தேன்.இது ஒரு காதல் கதைதான்; அதுவும் ஒன்றிணைந்து வாழ வழிவிடாத பெற்றோர்களை விட்டு ஓடிப்போகும் காதலர்களின் கதைதான்.காதலர்கள் காதலிக்க செய்யும் முயற்சிகளையோ, அவர்களின் சாகசங்களையோ, ரசமான காதல் வர்ணனை களையோ காட்டும் கதை அல்ல. 

கதைநாயகர்கள் மாயனும் வசந்தியும் உயிருக்கு உயிரான காதலர்கள். தங்கள் வீடுகளில் மணம் செய்ய ஒத்துக் கொள்ளமாட்டார்கள் என்பதால் ஊரைவிட்டு ஓடி,பதினைந்து நாட்களாக தெரிந்தவர் மற்றும் நண்பர்கள் வீடுகளிலும் ஒளிந்துகொள்கிறார்கள்; அந்த 15-வது மாலையில் பெண் வீட்டார் தூரத்தில் உள்ள ஒரு ஊரில் நண்பனின் வீட்டில் மாயனும் வசந்தியும் இருப்பதைக் கண்டுபிடித்து விடுகிறார்கள். பெண்ணின் தந்தை தனது ஊரின் நாட்டாமை மற்றும் சிலரையும் அழைத்துக்கொண்டு மாயன் வசந்தி இருக்கும் ஊருக்குச் சென்று அந்த வீட்டாரிடம் நயமாக பேசி இருவரையும் அனுப்பிவைக்கும்படி கேட்க, வசந்தி மாயன் அவனது நண்பனும் உடன்செல்ல மறுக்கின்றனர். இதனால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளைக் கருதி அந்த ஊரைவிட்டு தங்கள் ஊருக்குத் திரும்பி,அன்று இரவே அந்த இளவட்டங்களை பிரித்துக் கொண்டுவர ஏற்பாடுகளை செய்கிறார்கள்; அதே நாளிரவில் தோழன் சோனைமுத்து வீட்டிலும் காதலர்களை காப்பாற்றும் பொருட்டு அவர்களை வேறு இடத்திற்கு மாற்றுகிறார்கள்.இப்படி மாலை முதல் இரவு விடியும் வரை இரு தரப்பிலும் நடக்கும் சம்பவங்களை மிகவும் யதார்த்தமாக சுவையுடனும் இயல்பாகவும் எழுதி இருக்கிறார் நாவலாசிரியர்.

என்னதான் ஒரே சாதியாக இருப்பினும் இந்த காதலர்கள் விஷயத்தில் ஏழை பணக்காரன் என்ற வர்க்கபேதம் தலையிடுகிறது. இந்த பிரச்சினையை தீர்க்க சிவப்புத் தோழர் தன் வழியிலும் மாயனின் தந்தை ஒரு வழியிலும் நாட்டாமை ஒரு வழியிலும் அவரை அழுத்த நினைக்கும் மைனரும் அவனது கையாள் ராசப்பனும் மற்றொரு வழியிலும் செயல்படுகிறார்கள். இதனால் ஆத்திரமடைந்த வசந்தியின் தாய் தனக்கு ஆதரவாக செயல்பட இவர்களை நம்பி இனி பிரயோஜனம் இல்லை என்னும் முடிவுடன் நிலை தடுமாறி பைத்தியம் பிடித்தவள்போல் அலைகிறாள்.அந்த முற்றாத இரவின் முடிவுகளை தனது மெல்லிய ஒளியினைப் பாய்ச்சி, தானே சாட்சியாகி நிற்கிறது வட்ட நிலா!

இது விமர்சனம் அல்ல. மற்றவர்களுடன் பகிர்வு மட்டுமே! ஒரு சிறு குமிழிதான்! 

நன்றி!

முதல் வணக்கம்!

முதல் வணக்கம்!

  சாதாரண குடும்பத்தில் பிறந்து, நல்ல கல்வி கற்று அதன் மூலமாக அரசுசார் பள்ளியில் சிறந்த ஆசிரியராகப் பணியாற்றி,காமராஜரைத் தலைவனாக ஏற்று, தமிழ் இலக்கியப் பேச்சிலும் இணையற்ற எழுத்திலும் கலந்து, கையூட்டு பெற்றவன் என்று பிறர் கைகாட்ட முடியாதபடி வாழ்ந்துவரும் திரு.தமிழருவி மணியன் அவர்களின் கடைசி வரிசை மாணவனாக இருந்து, அவரை ஆசானாக வணங்கி இந்த வலைப்பூவைத் தொடங்குகிறேன்!