வெள்ளி, 22 நவம்பர், 2013

எனது 50-வது பிறந்த தினம்!

மனைவி புனிதவதியுடன் நான் 
       செப்டம்பர் மாதம் பற்றி நண்பர்களிடம் பேசும்போது நான் அடிக்கடி சொல்லும் வாசகம்: "செப்டம்பர் மாதம் அறிவாளிகள் பிறந்த மாதம்" என்று கூறுவேன்; உடனே அவர்கள், " அப்படியானால் அந்த முக்கியமானவர்களில் சிலரைச் சொல்ல முடியுமா?" எனக் கேட்கும்போது, நானும் " அறிஞர் அண்ணா, தந்தை பெரியார், பிரதமர் மன்மோகன் சிங் " இப்படி பல பெயர்களைச் சொல்லி முடியும் நிலையில் ராஜேந்திரன் எனும் என் பெயரையும் சேர்த்துச் சொல்வேன்; அப்போது அவர்கள் "அது யார் ராஜேந்திரன், ஓஹோ நீயா? உடனே இடத்தை விட்டுக் கிளம்பய்யா" என்பார்கள். இது நகைச்சுவையாகவே செய்வேன்; ஆனால், அந்த முக்கியமானவர்களின் தகுதியில் எள்ளளவும் என்னிடம் இருப்பதாக நான் கனவில்கூட நினைத்ததில்லை.

இளைய மகள் சந்திரலேகாவும் மூத்தவள் உஷா நந்தினியும் 
       எப்போதும்போல் வந்துவிட்டது 21-09-2013. ஆம் என்னுடைய பிறந்த நாளே தான்! இதன் சிறப்பு என்னவென்றால் இது எனது ஐம்பதாவது பிறந்த நாளாகும். வழக்கமாக எனது பள்ளி இறுதிச் சான்றிதழில் உள்ளபடி 22-தேதி தான் எனது பிறந்த தினம் என்று நினைத்து 1979-ல் பள்ளியை விட்டு நீங்கியதிலிருந்து கொண்டாடிவந்தேன்; அன்றிருந்த நிலையில் கூலிவேலை செய்துவந்த எனது பெற்றோர்கள் பிள்ளைகளின் பிறந்த நாட்களை பொருட்படுத்தியது இல்லை; நானும் அவர்களுக்கு நினைவுபடுத்தியது இல்லை; அதுசரி கொண்டாட்டம் என்று சொன்னது நீங்கள் எண்ணுவதுபோல் இல்லை; அந்த இள வயதில் அன்றைய நாளில் கோவிலுக்குச் செல்வது, நண்பர்களுடன் சேர்ந்து அரட்டையுடன்  மது அருந்துவது, உணவருந்துவது போன்றவைதான்; பிறகு அது நண்பர்களுடன் சேர்ந்து அரட்டையுடன்  மது அருந்துவது, உணவருந்துவது என்று என மாறி, தற்போது எல்லா அரட்டைகளையும் தவிர்த்து நான் மட்டும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்துவிடுவது தொடர்கிறது.ஆனால், இந்த பிறந்த நாள் அப்படி இல்லை.

         20 -09- 2013 அன்று, என்னை வெறுப்பேற்றுகிற அதே நேரம் என்னை மிகவும் விரும்பும் எனது இளைய மகள் சந்திரலேகா, வீட்டில் உள்ள கணினியில், சென்னை மாநகராட்சியின் இணையதளத்தினுள் நுழைந்து, பிறப்புச் சான்றிதழ் பட்டியலுக்குச் சென்று, எனது சரியான பிறந்த தேதி
21-09-2013 தான் என்பதை உறுதி செய்தார். இதன் பிறகு நானும் அதை ஏற்றுக்கொண்டுவிட்டேன்.
முன்புறம் ;வலமிருந்து இடம் 
எனது மாமியார் அவர்களுடன் எனது மனைவியும் நானும் .
பின்புறம்; எனது மகளுடன்  மருமகன் அருண் மரியநாதன் .

       மறுநாள் காலை எனது வீட்டாரின் வாழ்த்துகளைப் பெற்றுக்கொண்டு கணினியின் முன் அமர்ந்து முகநூலைத்  திறந்தேன். பலரும் வாழ்த்தி இருப்பார்கள் என்கிற எண்ணம் எனக்கு; ஆனால், எந்த வாழ்த்தும் வரவில்லை. ஏதோ ஒரு இழப்பாக மனம் நினைத்தது.காரணம் நானேதான். பள்ளிப்பதிவின்படி 22-09-1963 எனும் தேதியைத்தான் முக நூலின் காலக்கோட்டில் முன்பே குறித்திருந்தேன். அதன்படி எனக்கு எந்த வாழ்த்தும் வரவில்லை; அதன்பிறகு  21-ந் தேதி பிறந்த நாள் என்பதை அன்றைய தினம் காலையில்தான் முக நூலில் மாற்றியிருந்தேன்; அது  மற்றவர்களுக்கு சேரவில்லைபோல. சரி அடுத்த பிறந்த நாளில் சரி செய்து கொள்ளலாம் என விட்டுவிட்டேன்.

    நம்பிக்கை இருந்தாலும் கோவிலுக்குச் செல்ல தயக்கம் காட்டும் நான், அன்று மனைவியுடன் குமணன்சாவடியில் உள்ள ஷீரடி சாயிபாபா கோவிலுக்கும் பாடிக்கு (வீட்டிற்கு) திரும்பும் வழியில், திருவேற்காடு கோவிலுக்கும் சென்று வழிபட்டப்பின், எளிதான வழியில் செல்ல எண்ணி, கோலடி, அயப்பாக்கம் கடந்து பாடிக்கு செல்ல முடிவெடுத்து புறப்பட்டோம்; ஆனால் அயப்பாக்கத்தில் நுழையத் துவங்கியவுடன் திடீரென மழை வெளுத்து வாங்கியது ; இருவரும் முற்றாக மழையில் நனைந்தபடி வந்து கொண்டிருந்த போது சற்றுத்தள்ளி ஒரு வெல்டிங் பட்டறை ஒன்று கண்ணில்பட அதன் தாழ்வாரத்தில் ஒதுங்கினோம். அதன் உரிமையாளராகக் காட்டிக்கொண்டவர் பட்டறையின் உள்ளே அமரச் சொல்லி  வேண்டினார்; அப்போதுதான் தெரிந்தது, அது என்னுடன்  பணி செய்த உமாபதி எனும் வெல்டர். பழக இனியவர்; பின்பு மழை விட்டவுடன் அவரிடம் விடைபெற்று வீட்டிற்கு வந்து சேர்ந்தோம்;

     எனது மகள் உஷா, மருமகன் அருண், இளைய மகள் சந்திரலேகா மற்றும் மனைவியுடன் சந்தோஷமாகக் கழிந்தது எனது 50-வது பிறந்தநாள்; இரவு  நண்பர்களுடன் சிறு விருந்து. அனைவருக்கும் நன்றி!