ஞாயிறு, 24 ஜனவரி, 2021

 


அவளும் நானும் அலையும் கடலும்…
கார்த்திக் புகழேந்தி

சென்ற மாதம் வேளச்சேரியில் யாவரும் பதிப்பகத்தின் (ஜீவ கரிகாலன்) பி4புக்ஸ் புத்தகக் கடையின் திறப்பு விழாவுக்குச் சென்றிருந்தேன் ஒரு வாசகனாக. தாமதமாக நான் சென்றதால், திறப்பு விழா முடிந்துவிட, தலைமை விருந்தினர் தமிழச்சி தங்க பாண்டியன் புறப்பட்டுக் கொண்டிருந்தார். மூத்த மற்றும் இளைய (வயதில்) எழுத்தாளர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். எனக்கு சில எழுத்தாளர்களை மட்டுமே தெரியும்; ‘நட்சத்திர வாசிகள்’ கார்த்திக் பாலசுப்ரமணியன் அவர்களின் அறிமுகம் கிடைத்தது நண்பர் கார்த்திக் புகழேந்தி மூலம். எப்போதுமே எனது பணிநிமித்தம் இல்லாமல் ஒரு வாசகனாக எந்த புத்தகக் கடையில் நுழைந்தாலும் நான் ஒரு புத்தகத்தை வாங்கிவிடுவேன். நான் ஒரு நாவல் விரும்பி.
அப்படித்தான் அன்று பி4புக்ஸ்-ன் உள்ளே நுழைந்ததும் நட்புடன் ஜீவா அவர்கள் வரவேற்றார். நேர்த்தியாக அடுக்கப்பட்டிருந்த – காட்சிப் படுத்தப்பட்டிருந்த புத்தகங்களைப் பார்த்துவிட்டு, செல்வதற்கு மனமில்லாமல், இருக்கும் காசுக்குத் தகுந்தபடி ஏதேனும் ஒரு சிறு புத்தகம் வாங்க நினைத்தேன். அதே சமயம் அறிமுகமாகியும் நாம் வாசிக்காத எழுத்தாளரின் புத்தகத்தை வாங்குவது என்று முடிவு செய்தேன். சிறிது நேரம் ஜீவா பதிப்பகத்தின் கார்த்திக் புகழேந்தியுடன் உரையாடிவிட்டு, அவரது புத்தகத்தையே தேர்ந்தெடுத்து, அவரது கையெழுத்தினையும் பெற்று மகிழ்ந்தேன். அந்தச் சிறுகதைப் புத்தகம்தான் அவளும் நானும் அலையும் கடலும்… யாவரும் பதிப்பகத்தின் சிறுகதைத் தொகுப்பு. விலை – 130/- இது மூன்றாம் பதிப்பு. விரைவில் நான்காம் பதிப்பு வெளியிடுவார்கள் என்பது உண்மை.
நண்பர் கார்த்திக் புகழேந்தியின் இந்த ‘அவளும் நானும் அலையும் கடலும்…’ பாசாங்குகள் அற்ற சிறுகதைகளைக் கொண்டது. ஒவ்வொரு கதையானது துவங்கும்போதும், கடிவாளத்தில் பூட்டப்பட்ட குதிரை எப்படித் தன் வண்டியை மெதுவாக இழுத்துப் புறப்படுவது போல புறப்பட்டு, பின்பு சீரான வேகத்தில், ஆரவாரங்களற்றுச் சென்று சேரவேண்டிய இடத்திற்கு செல்கிறதோ, அப்படித்தான் முடியும்போதும்.
வட்டார வழக்கு எழுத்து என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். இவைகள் நெல்லை வட்டார வழக்குச் சிறுகதைகள் என்பது கூடுதல் சிறப்பு. இத்தொகுப்பில் பல இடங்களில் வரும் வட்டாரப் பழமொழிகள் மிகுந்த ரசிப்பைத் தருகின்றன. மரியாதைக்குரிய ஜோ டி குரூஸ் அவர்கள் சொன்னதுபோல, நிறைய – புழக்கத்தில் விடுபட்டுப்போன தமிழ் வார்த்தைகளை அனாயசமாகக் கையாண்டு, ஆச்சரியப்படுத்துகிறார். நெய்தல் நில வாழ்வை தன்னாலும் சிறப்பாக விவரிக்க இயலும் என்பதைக் காட்டும் சிறுகதை ‘வள்ளம்’. பரஸ்பர நம்பிக்கைகளே அன்றைய வாழ்வை வழி நடத்தின என்பதை விவரிக்கும் களம் ‘வள்ளம்’.
‘அவளும் நானும் அலையும் கடலும்…’
“ஒரு விருப்பம் அதைச் சொல்லியாகிவிட்டது. அது நிராகரிக்கப் படலாம் அல்லது எந்த மூணுசாமி புண்ணியத்திலாவது ஏற்றுக் கொள்ளவும் படலாம். இரண்டில் ஏதாவது ஒன்றுதானே வழி! எனக்கு முதலாவது நேர்ந்திருக்கிறது. அதற்காகக் கலங்கிப்போய் அந்த இடத்திலே சரிந்து விழுந்துவிடவா வாழ்க்கையில் இவ்வளவு போராட்டங்களையும் கடந்து வந்திருக்கிறோம்.”
‘குதிரைக் குட்டி’ இளவயதுக் காதலின் அருகே நம்மை அழைத்துச் செல்லும்.
எப்பேர்ப்பட்ட இளைஞனையும் வளைத்துப்போடும் தன்மை சாதீயத்திற்கு உண்டு; அதனால்தான் இளைஞர்களைக் கொண்டே தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்கிறார்கள் சாதீயத் தலைவர்கள்; அற்புதமாக சொல்லப்பட்டிருக்கும் இக்கதை ‘கொலைச்சொல்’.
‘காதலின் தீபமொன்று’ இதில் வரும் மூத்த கிரிக்கெட் அண்ணாச்சி முருகன்கள் நிறையப் பேர்கள் உண்டு; உள்ளூர் கிரிக்கெட்டை ஆதரித்த அண்ணாச்சிகளில் நானும் ஒருவன்; அவர்கள் இல்லையென்றால், உள்ளூர் அணிகள்(சென்னைக்கு வெளியே இருப்பவை), பந்து வாங்கக்கூடக் காசில்லாமல் திரியும் நிலை. அன்று ரசிகர் மன்றங்களும் இப்படித்தான். அவர்களோடு இணைத்தும் ஒரு காதல் அனுபவத்தைக் காட்டுகிறார் நூலாசிரியர் கார்த்திக் புகழேந்தி. அருமையான யதார்த்தமான இக்கதைகளை வாசகனாகவே ரசித்தேன்; இன்னும் எழுத நிறைய உண்டு; ஆனால், நான் விமர்சகன் இல்லை. அதனால் முரண்கள் ஏதும் இப்புத்தகத்தில் இருப்பதாக நான் அறியவுமில்லை.

 

ஜல்லிக்கட்டு ஜாதிக்கட்டு அதி அசுரன் அவர்கள் காட்டாறு இதழில் எழுதித் தொகுத்த 'ஜல்லிக்கட்டு ஜாதிக்கட்டு' என்ற நூலினை வாசித்தேன். 90 பக்கங்களே கொண்ட இந்நூல் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களிடம் எழுப்பும் கேள்விக்கு எவராலும் சரிவர பதில் சொல்ல இயலுமா எனத் தெரியவில்லை!

தமிழனின் பல பண்பாட்டினை எதிர்க்கும் இந்துத்துவவாதிகள் இந்த ஏறுதழுவலை மட்டும் ஆதரிப்பது ஏன்?
தெரிந்தே தமிழ்த் தேசியர்களும் ஆதரிப்பது எப்படி?
தலித்துகள் இந்த ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ள
முடியாமற் போவதற்கான காரணங்கள் என்ன?
சாதிவெறி இல்லை என்பதை மறைக்க முடியுமா?
காளைகளுக்கு எந்தத் தொல்லையும் இல்லை; பாதுகாப்பாகத்தான் இருக்கின்றன என்பவர்கள், காயம் பட்டவருக்கோ, உடல் ஊனமுற்றவருக்கோ அல்லது உயிரிழந்தவரின் குடும்பத்துக்கோ என்ன உதவிகள் தரப்படுகிறது?
இதன் பின்னால் உள்ள சர்வதேச தொண்டு நிறுவனங்கள் எவை? இவற்றின் பங்களிப்புகள் என்ன?
எவ்வளவு காலமாக ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது? எந்தந்த அரசுகள் இதைத் தடுத்தன?
நாட்டு மாடுகள் இதன்மூலம் உண்மையிலேயே காப்பாற்றப்பட்டு, அவ்வினங்கள் விருத்தியாகி வருகின்றதா?
இப்படி எண்ணற்ற நியாயமான கேள்விகளின் தொகுப்புகளாக உள்ள இக்கட்டுரைகள், உண்மையிலேயே பல கருத்துகளை தெளிவாக எடுத்துரைக்கப்படுவதாக நான் உணருகிறேன். இதை ஒரு விவாதமாகக்கூட பறிமாறலாம்.
ஒரு வெளிப்படையான உண்மையை உரைப்பதாக நான் எண்ணுவது எனது சொந்தக் கருத்து. ஆதரிப்பதோ எதிர்ப்பதோ தங்களின் விருப்பம். பாரம்பரியம் எனும் பெயரில் எல்லாவற்றையும் ஏற்பது சரியா என்பதே இப்புத்தகத்தின் பலமான கேள்வி. நிச்சயம் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்.

 

 


கறுப்பர் நகரம்

பல புத்தகக் கடைகளிலும் பாரதி புத்தகாலயத்திலும் கறுப்பர் நகரம் புத்தகத்தைப் பார்த்திருக்கிறேன். இந்தப் புத்தகத்தின் தலைப்பைப் பார்த்தவுடன், எடுத்துப் பார்க்காமலேயே, இது ஒரு தென்னமரிக்க எழுத்தாளரின் தமிழாக்கம் செய்யப்பட்ட நாவல், என்ற அளவில் முன்முடிவு செய்திருந்தேன். அதை எடுத்தும் பார்த்ததில்லை.
சில நாட்களுக்கு முன்பு கொரட்டூர் கிளை நூலகத்திற்குச் சென்றிருந்த போது, நூலகரின் மேசையில் கருப்பர் நகரம் எனும் இந்நூல் இருந்தது. அவரின் சிபாரிசின் பேரில் அதைப் படிக்கத் துவங்கினேன். இதுவரை கரன் கார்க்கி அவர்களின் ஒரு நூலையும் நான் வாசித்ததில்லை.
ஒரு சென்னை மத்திய சிறைக்கைதி தண்டனைக் காலம் முடிந்து (ஏறக்குறைய இருபதாண்டுகளுக்கும் மேல்) வெளிவந்தபோது, அவனுக்கு சென்னை புதுவிதமாகக் காட்சியளிக்கிறது. அவன் பார்த்த பல கட்டிடங்கள், பூங்காக்கள் காணாமல் போய்விட்டன. சொந்த பந்தங்கள் ஏதுமின்றி, தங்குவதற்குக்கூட ஒரு இடமின்றித் தவிக்கும் நிலையில் அவனது கடந்தகாலச் சிந்தனைகளே இந்நாவலாக வந்துள்ளது.
சென்னையின் அன்றைய சேரி வாழ்க்கையை அப்பட்டமாகப் படம் பிடித்துக் காட்டும் இந்நாவலை – ஒரு காலத்தில், நானும் எனது தாய் தந்தையருடன் அந்த அனுபவத்தை பெற்று வளர்ந்தவன் – நான் கொண்டாடுவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. அந்தச் சூழ்நிலை மற்றும் வாழ்வியலை நமது சந்ததிகள் பெறக்கூடாது எனும் எண்ணத்தில் பின்னர் எங்கள் வீடு வளர்ந்துவரும் புறநகர்ப் பகுதிக்கு மாற்றப்பட்டது. வடசென்னைப் பகுதி இன்றைக்கும்கூட 40% கூட மாற்றம் பெறவில்லை.
எஸ்.என்.செட்டித் தெரு, தேவராஜ் கிராமணி தோட்டம், காலரா மருத்துவமனை, காசிமேடு மீனவர் குடியிருப்பு, புதுப்பேட்டை, சித்ரா தியேட்டரிலிருந்து பாந்தியன் சாலை துவக்கம் போன்ற பகுதிகள் இன்றும் என் கண்முன்னால் மிகச்சிறு வளர்ச்சி மட்டுமே அடைந்த மாறுதலாகக் காண்கிறேன். இந்த மக்களின் திறந்தவெளி மற்றும் மாநகராட்சிக் கழிவறைகளின் வரலாறு சிறைத் தண்டனைகளை விடக் கொடுமையானது
செங்கேணி எனும் அந்த சிறைவாசியின் நினைவுக் காட்சிகளே இக்கதை. தந்தை பின்பு தாய் என இருவரையும் இழந்த நிலையில், உறவுகளைத் தேடி சென்னைக்கு வரும் அவனை, உறவுகளும் புறந்தள்ள, வடசென்னை சேரிப் பகுதிக்கு வந்து ஐக்கியமாகிறான் செங்கேணி. உழைப்பால் ஒரு கைவண்டி சம்பாதித்து, அதில் வந்த வருமானத்தில் குடிப்பது, சாப்பிடுவது என தனது காலத்தைத் தள்ளி வரும் வேளையில், ஆராயி எனும் பெண்ணின் மீது காதலாகி, அவளது மாமனின் எதிர்ப்புக்கிடையே, திருமணம் செய்து, பேசின்பிரிட்ஜ் அருகே சேரியில் குடித்தனம் செய்து வருகிறார்கள்; சாராயம் விற்கும் பகுதியை ஒட்டி. சேரி என்றால் குற்றவாளிகளே அதிகம் இருப்பார்கள் என்ற எண்ணத்தைக் கலைத்து அங்கும் மனிதம் உண்டு என்பதைக் காட்டும் இவர்களின் வாழ்வின் வழியே அன்றைய வடசென்னையை மட்டுமின்றி – சேரிகளை, அது மாறாமல் மையங்கொள்ள வைக்கும் அரசு மற்றும் அரசியல்வாதிகளையும் வெளிக்காட்டுவதோடு, காவல்துறையின் குற்றவாளிகளுடனான இணக்கத்தையும் சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார் நூலாசிரியர் கரன் கார்க்கி! முதன்முதலாக திரையில் இயக்குநர் துரை அவர்களின் 'பசி' படத்தில்தான் சேரிப்பகுதிகள் நிர்வாணப்படுத்தப்பட்டது என்று நினைக்கிறேன். அந்த அவலச்சுவை இந்த நாவலிலும் எனக்குக் கிடைத்தது. மூக்கைப் பொத்திக் கொள்ளாமல் வாசிக்க வேண்டிய சேரிப் புத்தகம்.
பாரதி புத்தகாலயம் வெளியீடு.