ஞாயிறு, 21 ஜூலை, 2024

 

நளினி ஜமீலா

சமீபத்தில் படித்தது: நளினி ஜமீலா சுயசரிதை. மலையாள மொழி, தமிழாக்கம்: குளச்சல் மு.யூசுஃப். பல இழப்புகளைச் சந்தித்தபோதும் தீண்டாமைக்கு இணையான கொடுமைகளைத் தன் உறவுகள் இழைத்தபோதும் வெளிப்படையான ஒப்பனைகளற்ற தன்னைப் பற்றிய கழிவிரக்கம் ஏதுமின்றி, எந்தவித அனுதாபங்களையும் எதிர்பார்க்காத ஒரு சுய வாழ்க்கையைக் காட்டியிருக்கிறார் ஜமீலா.

அதே சமயம் தன்னை ஒரு கல்மனக்காரியாக நடத்திக் கொள்ளாமல் பாசம், நட்பு, சமூக சிந்தனை என பல அக்கறைகள் கொண்ட போராளியாகவே வாழ்கிறார். ஒரு மொழிபெயர்ப்பு நூல் என எண்ணாத வண்ணம் தமிழாக்கித் தந்துள்ளார் குளச்சல் மு.யூசுஃப்.

எல்

 இந்தியாவில் நெருக்கடி நிலை
இன்றைய அரசியல் சூழ்நிலையில் அனைவரும் படிக்க வேண்டிய முக்கிய நூல்களில் ஒன்றுதான்,

இரா.சுப்பிரமணி அவர்கள் எழுதிய
'இந்தியாவில் நெருக்கடி நிலை'
சாளரம் வெளியீடான இந்நூல் இந்திராவின் ஆட்சியின்போது நடைபெற்ற நெருக்கடிநிலை கால அலங்கோலத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறது. அந்தச் சமயத்தில் நீமன்றங்களின் சார்பு மற்றும் சார்பற்றநிலை, பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்படல், பத்திரிகைகளிலும் சார்பு மற்றும் சார்பற்றநிலை, அரசியல் கட்சிகளிலும் ஆதரவு எதிர்ப்புப் பிரிவுகள் என்ற நிலை அரங்கேறியதன் விளக்கம் இதில் இடம் பெற்றுள்ளது.
பேச்சு சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம் மற்றும் கருத்துரிமை எப்படி அடக்கப்பட்டது என்பதோடு, மக்களின் மீதும் தேசத் தலைவர்களின் மீதும் அரங்கேற்றப்பட்டக் கொடுமைகளும், அதே காலகட்டத்தில் தமிழகத்தின் நிலை என்ன? மிக அதிக எதிர்ப்புக் காட்டிய மாநிலம், அதிலும் மத்திய அரசை எதிர்த்து சட்டமன்றத்திலேயே முழக்கம் கொடுத்தது யார் என்ற விவரத்தோடும் அமைந்திருக்கும் இந்நூல் ஒரு அரசியலின் ஒரு காலத்தின் பெட்டகம்; இப்புத்தகத்தை அந்த ஒரு கண்ணோட்டத்தோடு சுருக்கிவிட முடியாது; இன்றைய பாஜக, அன்றைய ஜனசங்கமானது எவ்வளவு தீவிரமாக சக எதிர்க் கட்சிகளோடு இணைந்து போராடியது எனக் காட்டும் வேளையில், அப்படிப்பட்ட ஜனசங்கத்தின் ஆட்சியிலா இப்போது நாம் வாழ்கிறோம் எந்த வகையில் வாழ்கிறோம் என்ற கருத்தையும் முன் வைக்கிறது.
190 பக்கங்கள் கொண்ட இந்நூலை 2019 சென்னை புத்தகக் காட்சியில் கருப்புப் பிரதிகள் அரங்கத்தில் வாங்கியபோதும் இப்போதுதான் வாசித்து முடிக்க இயன்றது. நிச்சயம் இது இளைய சமுதாயத்தின் அரசியல் வளர்ச்சிக்கு கண்ணாடியாக விளங்கும் நூல்.
படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.
எல்லா உணர்ச்சிகளும்:
Nizamdeen Peer Mohd, Barath Kumaar மற்றும் 15 பேர்

 "கதையல்ல வரலாறு"

கட்டுரை; ஆசிரியர்: நாகரத்தினம் கிருஷ்ணா
கதையல்ல வரலாறு 100 பக்கங்கள் கொண்ட ஒரு சிறு கட்டுரை நூல்தான்; என்றாலும் வரலாறுகளின் வரலாற்றை அழுத்தமாக அழகாகத் தொகுத்தளித்துள்ளது. வரலாற்றிலிருந்து கதைகள் வருவது இயல்பானது; ஆனால், நம்மவர்கள் புனைவுகளையே வரலாற்றின் அங்கமாக்கி விடுவார்கள்; எத்தனையோ ஆளுமைகளின் வரலாறு பலவாறாகத் திரிக்கப்படுவதை விவரமாக எடுத்துக்காட்டும் இந்நூல், அக்கட்டுரையின் ஆய்வு முடிவை- உண்மையை நாமே தெரிவு செய்துகொள்ளும் வாய்ப்பளிக்கிறது.
நற்றிணை வெளியீடான இப்புத்தகத்தை புதுச்சேரியைப் பூர்வீகமாகக் கொண்ட பிரஞ்சு தேசத்தில் வசிக்கும் திரு.நாகரத்தினம் கிருஷ்ணா எழுதியிருக்கிறார். சிறுகதைத் தொகுதிகள், கட்டுரைத் தொகுப்புகள், பிரெஞ்சிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்புகள் பலவற்றையும் அளித்துள்ள இவர், நீலக்கடல் மற்றும் மாத்தா-ஹரி என்ற இரண்டு நாவல்களையும் எழுதியுள்ளார். பிரெஞ்சிந்திய (புதுச்சேரி) வரலாற்றைப் பற்றியும் பல ஆய்வுகளை அளித்துள்ளார்.
'கதையல்ல வரலாறு' எனும் இக்கட்டுரை நூலில், இக்கட்டுரைகள் வரலாற்றுப் புரிதல்களைத் தருவதோடு பல தரவுகளோடும் மிகவும் சுவாரசியமாகவும் இருக்கிறது. அதோடு உண்மையை விளங்கத் தருவதும் இதன் சிறப்பாகும். இரண்டாம் உலகப் போரின்போது, ஹிட்லருக்குத் தெரியாமலே, அவரது நண்பர் ரூடால்ஃப் ஹெஸ், நாஜிக்களுக்கு ஆதரவாக, போர் நிறுத்தம் செய்ய வேண்டி, இங்கிலாந்திடம் ரகசியமாக இரவல் விமானத்தில், பிரிட்டிஷ் வான்படைகளுக்கும் சிக்காதவண்ணம் தூது போனது ஏன்? ஹிட்லருக்குத் தெரியாமல் இது நடந்திருக்குமா? அதன்பின் ஹெஸ் காணாமல் போய்விட்டார் என ஜெர்மனி அறிவித்ததன் நோக்கம் என்ன? படிக்கப் படிக்கப் பல தொடர் கேள்விகள் உருவாகி, கடைசியில் தன் சோக முடிவைத் தானே தேர்ந்தெடுக்கும் நிலை ரூடால்ஃப் ஹெஸ்-க்கு ஏற்பட்டதே மிச்சம்.
இரண்டாவது கட்டுரை ஃப்ரெஞ்சு ஆளுகைக்கு உட்பட்ட புதுச்சேரியில், துபாஷாக நைனியப்பப் பிள்ளைக்குப் பதவி கொடுத்தவர் கவர்னர் ஆந்த்ரே எபேர். அவர் தனது மகனுடன் சேர்ந்து நைனியப்பப் பிள்ளையின் மீது குற்றம் சுமத்துவதும் பின்பு நைனியின் மகன் குருவப்பப் பிள்ளை, பாரீஸ்-க்குச் சென்று, தந்தைக்காக வாதாடியதோடு, இழந்த பல சொத்துக்களையும் அரசிடமிருந்து மீட்டு, பின்பு தானே துபாஷாகவும் வருவதும், அன்றைய ஃப்ரெஞ்சு அரசின் ஆட்சியினை விவரிப்பதாகும்.
மூன்று மற்றும் நான்காவது கட்டுரைகளில் ரஷ்யாவின் ஆளுமை ஸ்டாலின் பற்றிய மரணத்தின் மர்மங்களை அலசுவதும், ஹிட்லரது வாழ்வின் கடைசி தருணங்களை விவரித்திருப்பதும் அதில் ரஷ்யாவின் கடைசி நிலைப்பாடும் மிக முக்கியமான பதிவுகள் என்றே சொல்ல வேண்டும். நாம் தவறவிடக் கூடாத ஒரு நல்ல புத்தகம் 'கதையல்ல வரலாறு'
20/12/2020 அன்று டிஸ்கவரி பேலஸ் புத்தகக் கடையில் சிறப்புக் கண்காட்சி, திரு வைரமுத்து அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. அன்று இந்த புத்தகத்தைத் தேர்ந்தெடுத்து வாங்கினேன்; விலை 80ரூ.
படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.
எல்லா உணர்ச்சிகளும்:
Shahjahan R, Ramesh Kannan மற்றும் 23 பேர்
2
2
விருப்பம்
கருத்திடுக
அனுப்புக
பகிர்க

 நேரு முதல் நேற்று வரை

ஓர் I.A.S. அதிகாரியின் வியப்பூட்டும் பணி அனுபவங்கள்
ப.ஸ்ரீ.இராகவன்.
கிழக்குப் பதிப்பக வெளியீடு.
திரு. ப. ஸ்ரீ. இராகவன் அவர்கள் தனது இந்திய ஆட்சிப் பணிக்காலத்தின் அனுபவங்களை உள்ளது உள்ளபடியே விவரித்துள்ளார். சீர்காழியில் பிறந்த தமிழர். சென்னை மற்றும் பூந்தமல்லியில் இருந்து படித்து வளர்ந்திருக்கிறார். I.A.S. முடித்து மத்திய மாநில அரசுகளிலும், ஐ.நா.சபையிலும் பணியாற்றியுள்ள இவர், நேரு, சாஸ்திரி, இந்திரா, தேசாய் ஆகிய பிரதமர்களிடமும் பல மத்திய அமைச்சர்களிடமும் மாநில முதல்வர்கள் சிலரிடமும் இணைந்து பணியாற்றி இருக்கிறார். அதனினும் மேலாக, தான் அதிக பணிக்காலத்தைச் செலவிட்ட மேற்கு வங்க மாநிலத்தின் எதிர்க்கட்சியினரிடமும் தொழிற்சங்கத்தினருடனும் மாணவர்களுடனும் ஏற்பட்ட சில மோதல்களையும் மீறி அவர்களின் ஒத்துழைப்பையும் அங்குள்ள மக்களின் அன்பையும் ஒருசேரப் பெற்றதைத்தான் இந்நூலாசிரியர் மெச்சிக்கொள்கிறார். தான் வேலையில் சேர்ந்த நாள் முதல், ஓய்வு பெறும் வரையிலும் அதன் பின்னுமான தனது சமூக அக்கறையுள்ள செயல்பாடுகளை விருப்பு வெறுப்பின்றி யார்மீதும் பழி சொல்லாமல், காழ்ப்புணர்ச்சிக் காட்டாமல் தனது அனுபவங்களை விளக்கி எழுதியிருக்கிறார். சுவாரசியமான சம்பவங்களும் இதில் பல உண்டு.
இன்றைய சீர்கேடுகளைக் கண்டிக்கும் இவர், ‘அன்றைய சுதந்திரம் பெற்ற இந்தியாவில் சுயநலமற்ற முன்மாதிரித் தலைவர்கள் நிறைய இருந்தார்கள்; அவர்கள் எல்லாம் மறைந்து, இன்று அவ்வகைத் தலைவர்கள் இல்லாத குறைபாடே இன்றைய சீர்கேடுகளுக்குக் காரணம்’ என்றும், ‘இன்று குற்றமிழைப்பவனே தலைவன் எனும்போது, தொண்டன் மற்றும் மக்களின் மனநிலையும் தலைகீழாகியதில் வியப்பென்ன?’ என வினவுகிறார். நமக்கு தமிழ்நாட்டின் மாநில மந்திரியாக இருந்த கக்கன் அவர்களின் கடைசிக் காலத்தை நினைவுகூறும் இவர், அடுத்த உதாரணமாகச் சொல்வது, இருமுறை தற்காலிக பிரதமராக இருந்த குல்சாரி லால் நந்தா, தனது வாழ்வில் கடைசி நாட்களில் மிகுந்த வறுமையில் ஒதுங்க வீடொன்றும் இல்லாமல் அவதிப்பட்டு இறந்ததைத்தான். இன்று தலைவர்களுக்குப் பஞ்சம். இன்றைய மக்களின் தேர்வை, தந்தை பெரியாரின் வரிகளில் அழகாக நினைவுபடுத்துகிறார் இராகவன்:
“தேர்ந்தெடுக்கப்பட்டவன் அயோக்கியன் என்றால்
தேர்ந்தெடுத்தவன் முட்டாள்”.
இன்று கல்வியிலும் நாம் சீரழிந்துவிட்டதை, தான் படித்த இந்திய ஆட்சிப் பணியின் இன்றைய நிலையை வைத்தே விவரித்தபோது வேதனைதான் மிஞ்சுகிறது. “அன்று மொத்தம் 110 அல்லது 120 பேர்கள்தான் தேர்வு எழுதுவோம். அதில் முதலில் வரும் 35 நபர்கள் I.A.S.க்கு உரியவர்களாக இருப்பார்கள்; அந்த 35 நபர்களில், 25 பேர்கள் தென்னிந்தியர்களாக இருப்பதோடு, அவர்களில் 15 பேர்கள் தமிழர்களாக இருப்பது இன்னும் சிறப்பு. அதிலும் முதல் பத்து இடங்களைத் தமிழர்களே தக்க வைத்துக் கொள்வார்கள். இன்று 650 பேர்கள் தேர்வெழுத, அதில் தேறியவர்களில் 50 நபர்களே தென்னிந்தியர்கள்; இதில் தமிழர்கள் 5 அல்லது 6 பேர்கள் மட்டுமே இடம் பிடிக்கிறார்கள்” இப்படியாக நாம் வாய்ப்பை இழப்பதைச் சுட்டிக் காட்டுகிறார் ஆசிரியர்.
சீனப் படையெடுப்புக்குப் பின்னர், ஒட்டுமொத்த கம்யூனிஸ்டு பொறுப்பாளர்களையும் தீவிரவாதிகளாகச் சித்தரித்த அரசின் கொள்கைமீது தன்னால் இயன்ற தடுப்பு முயற்சி.
தேசிய ஒருமைப்பாட்டுக் குழுவின் செயலராகப் பணியாற்றியது.
கிழக்குப் பாகிஸ்தானுக்கு ஆதரவாக, இந்திய பாகிஸ்தான் போர்
ஓய்வு பெற்ற அதிகாரிகள் மற்றும் நீதிபதிகளை கட்சியில் சேர்த்து, அவர்களுக்குப் பதவி வழங்கும் பழக்கம் இந்திராவின் காலத்தில் துவங்கியதையும், பதவி அடைந்தவர்கள் சராசரி அரசியல்வாதிகளாக மாறிவிடுவதையும் எடுத்துக் காட்டியிருக்கிறார்.
மேற்கு வங்காளத்தில் பணியாற்றிய இவர், வங்காளிகளின் குணங்களைப் பற்றி எழுதியிருப்பதை ஒரு சில வரிகளில் சொல்வதைவிட இப்புத்தகத்தில் இராகவன் அய்யா அதிகம் சொல்லியிருக்கிறார். அதைப் படிப்பதே சிறப்பு.
இந்திராவின் அமைச்சரவையில் மத்திய அமைச்சர் ராவ் பிரேந்திர சிங் அவர்கள் ராகவன் அவர்களுக்கு மிகுந்த நெருக்கமானவர். அதைவைத்து இருவரும் பேசிக்கொள்ளும் ஒரு உரையாடல்மூலம், பிரதமரிடம் அல்லது கட்சித் தலைவரிடம், அமைச்சர்கள் – அவர்களது கட்சியின் பொறுப்பாளர்கள் எவ்வளவு சுதந்திரம் பெற்றிருந்தார்கள் என்பதைக் கண்டுகொள்ள முடியும்.
சோவியத் ரஷ்யாவின் அதிபர் புல்கானின் மற்றும் அந்நாட்டுப் பொதுஉடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் குருச்சேவ் ஆகியோரின் இந்திய வருகையின்போது, ஏற்பட்ட வாகனக் கோளாறு மற்றும் மக்கள் வெள்ளத்தை கட்டுப்படுத்த மேற்கொண்ட நெருக்கடிகள் அறிய வேண்டியவைகளாகும்.
தில்லியில் குடும்பத்துடன் வசித்தவிதமும் அன்றைய சம்பளமும், அப்போதைய விலைவாசியும், தில்லியில் இருப்பதாலேயே உறவு மற்றும் நட்புகளால் ஏற்பட்ட அசௌகரியங்கள் நிச்சயம் நாம் அறிந்துகொள்ள வேண்டியவை.
உள்துறை அமைச்சகத்தில் பணிபுரிந்த நாட்களில், தன்னை வயதானவராகக் காட்டிக்கொள்ளாத நேருவின் வேகமும் சுறுசுறுப்பும் இளம் வாலிபனுக்கு நிகரானது எனும் இவர், விவசாய மந்திரியாக இருந்த சி.சுப்பிரமணியத்தின் சிந்தனைகளும் செயல்திறனும் அபாரமானவை என வியக்கிறார்.
இந்தி திணிப்பு விஷயத்தில், நேருவின் உறுதிமொழி அவருக்குப் பின்னால் கடைப்பிடிக்காத காலத்தை விவரிக்கிறார். தனிநாடு கோரிக்கையை அண்ணா கைவிட்டதையும் அதனால் பல பிரச்சினைகள் தவிர்க்கப்பட்டதையும் காட்டுகிறார். காஷ்மீர் பிரச்சினையை அன்று அரசு – ஷேக் அப்துல்லாவைக் கையாண்ட விதத்தையும் விளக்குகிறார்.
ஹஸ்ரத்பால் மசூதியில் காட்சியில் வைக்கப்பட்டிருந்த நபிபெருமானின் தலைமுடிச் சின்னம் காணாமல்போன சம்பவம்; பின்பு சின்னம் கிடைத்தது, யாவும் மறக்கவியலா பதிவு.
எல்லாவற்றுக்கும் மேலாக, ‘அமெரிக்க உளவுத் துறையின் கைப்பாவை திமுக தலைவர் அண்ணாதுரை’ என்று, அறிஞர் அண்ணாவின் மீது, டி.என்.சேஷன் அவர்கள் தனது நூலில் எழுதிய விவகாரத்தை நேர்மையாக, உண்மை எது எனத் தெளிவுபடுத்தியிருப்பது இன்றைய சமூகம் அறிந்துகொள்ள வேண்டியதாகும்.
இன்னும் எழுத எவ்வளவோ உண்டு; படிக்கும்போது உண்டாகும் சுவாரசியம் குறையக்கூடாது என்பதற்காக இதோடு நிறுத்திக் கொள்கிறேன். இந்தப் புத்தகத்தில் உள்ள மிகப் பெரிய குறை: இவரது பணிக்காலத்தில் இந்திராவின் ஆட்சியில் நடந்த அவசர நிலைப் பிரகடனச் செயல்பாட்டினைப் பற்றிய இரண்டாவது சுதந்திரப் போராட்டம் என பல தலைவர்கள் விமர்சித்த, கொடுமைகள் நிறைந்த விவரங்கள் இல்லாமல் அல்லது எழுதாமல் போனது ஏன் என்பது மட்டுமே! இந்திரா, மொரார்ஜி மற்றும் சரண்சிங் இயல்பான குணங்களைத் தெளிவாகவும் பதிவிடும் இவர், நெருக்கடிநிலையை வெறும் மேலோட்டமாக எழுதிச் சென்றது புதிரானது,
பல பிரதமர்களின் நடவடிக்கைகளையும் அன்றைய அரசியல் மற்றும் அண்டை நாடுகளின் சூழலை அறியவும் நிச்சயம் திரு.ப.ஸ்ரீ.இராகவன் அவர்களின் இந்நூல் பெரிதும் உதவும் என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை. வாசிக்கவும் நண்பர்களே!
படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.
எல்லா உணர்ச்சிகளும்:
Nizamdeen Peer Mohd, Gowtham Sham மற்றும் 34 பேர்