ஞாயிறு, 21 ஜூலை, 2024

 நல்ல நிலம்

பாவை சந்திரன்
1990 – களில் தொடர்ந்து வாரம் ஒரு முறை அல்லது இருமுறை நூலகம் செல்வேன். இக்காலக் கட்டத்தில்தான் நான் அதிக நூல்களைத் தேர்ந்தெடுத்து வாசித்தேன். அரசு நூலகங்கள் சென்று, படித்த புத்தகங்களைக் கொடுத்துவிட்டு, ஒரு சில மணிநேரங்கள் செலவிட்டு இனி வாசிக்க வேண்டிய நூல்களைத் தேர்வு செய்வேன். அப்படிப் புத்தகங்களைத் தேடும்போது, நூலகர், இவன் என்ன நூல்கள் அடுக்கப்பட்ட பல வரிசைகளின் இடையே தூங்கிவிட்டானா அல்லது தேடும் சாக்கில் ஏதாவதொரு நல்ல புத்தகத்தைத் திருடி மறைத்துக் கொள்கிறானா எனும் எண்ணம் தோன்றி, முதலில்
“என்ன தம்பி, இன்னுமா எடுக்கிற?”
“ஏன் சார், உங்களுக்கு நேரமாகி விட்டதா?”
“பரவாயில்ல சீக்கிரம் எடு” என்பார்.
அடுத்த முறை போகும்போது,
“மூணு உறுப்பினர் அட்டைய போட்டுகிட்டு, அதுக்கான மூணு புக்கையும் நீ எடுக்குறதுக்குள்ள…
அதுசரி, நீ என்ன படிச்சிருக்கே, இவ்ளோதானா, எடுத்துப் படிக்கிற தலைப்புகளப் பாத்தா அப்படித் தோணலையே…”
“புத்தகம் படிக்கிறது எப்படின்னு எனக்கு ஒரு நண்பர் சொல்லி அதுப்படி நான், நிறைய எழுதினவர் கொஞ்சமா எழுதினவர் – பிரபலமானவர் பிரபலம் ஆகாதவர் என்றெல்லாம் எழுத்தாளர்களைத் தேர்வு செய்றதில்லை; நல்ல நூலாக நான் கேள்விப்பட்டு, அதிலுள்ள முன்னுரை மற்றும் பதிப்புரைகளை படித்து பின்புதான் வாசிக்க முடிவு செய்வேன்” என்று சொன்னேன்.
இது அந்த நூலகத்தின் நான் சென்று சேர்ந்த ஆரம்ப நாட்களில்தான்; நூலகருடன் அதிக நெருக்கம் ஏற்பட ஏற்பட அவரே என் ரசனை அறிந்து சில புத்தகங்களை அறிமுகம் செய்து படிக்கச் சொல்வார். பின்னர் அவருக்கும் நான் சில உதவிகள் செய்தேன் நூலக வாசக நலனுக்காக.
அங்குதான் நான் ர.சு.நல்லபெருமாள், பிரபஞ்சன், பொன்னீலன், ஜெயகாந்தன், ப. சிங்காரம், பூமணி, கி.ரா., தோப்பில், விட்டல் ராவ், நாஞ்சில் நாடன், சா. கந்தசாமி, சோ.தருமன், வைரமுத்து, அப்துல் ரகுமான், மு.மேத்தா, தி.ஜா, ஈழத்தின் கே.டானியல், செ.கணேசலிங்கன், தேவகாந்தன், அருளர், இராஜம் கிருஷ்ணன், ஹெப்சிபா ஜேசுதாசன் போன்றவர்களைக் கண்டடைந்தேன். மொழிபெயர்ப்பு நூல்களில் புஷ்கின், பதயேவ், பரீஸ் பொலெவோய், ராகுல சங்கிருத்தியாயன், தகழி, முகுந்தன், வைக்கம் மு.பஷீர், மாஸ்தி வெங்கடேச அய்யங்கார், சிவராம கரந்த், வி.ஸ. காண்டேகர், சரத் சந்திரர், பதீன் பந்தோபாத்யாய, பிரபுல்ல ராய் என்று தொடர்ந்து கொண்டிருந்த வேளையில்தான் சிற்றிதழாகவும் இல்லாமல், இலக்கியம் தானோ எப்படியோ வழக்கமான மசாலாக்கள் இல்லாத வகையில் ‘புதிய பார்வை’ எனும் மாதமிருமுறை இதழ் ஒன்று புதியதாக வெளிவந்தது.
‘புதிய பார்வை’
கணவனால் மனைவிக்குப் பெருமையா அல்லது மனைவியால் கணவனுக்குப் பெருமையா என்பது அந்தந்தக் குடும்பத்தின் வாழும் சூழ்நிலையைப் பொறுத்தது; இங்கே பெருமையா சிறுமையா என்ற ஆய்வு நமக்கு வேண்டாம்; தமிழக அரசின் பொதுமக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்த நடராசன், அரசியல் சூழல் காரணமாக, சசிகலாவின் கணவர் நடராசன் என்றே வழங்கப்பட்டது மனைவியின் ஆளுமைதான். அப்படி அரசியலில் எதிர்ப்பும் ஆதரவும் நிரம்பப் பெற்றிருந்த திரு. நடராசன் அவர்கள்தான் இந்த புதிய பார்வை இதழின் ஆசிரியர்! அவரது இலக்கிய ஆர்வம் காரணமாகத் துவங்கப்பட்ட இந்த இதழில் பலரும் பங்களித்து இருக்கிறார்கள் சில வேற்றுமைகளை மறந்து அல்லது தள்ளிவைத்து. ஒரு சில ஆண்டுகளே வெளிவந்து நின்று போனது இந்த இதழ். சில வருடங்கள் கழித்து வெளியாகி, கொஞ்சம் கொஞ்சமாக தனது இயல்பை இழந்து நடந்து வந்தது. இப்போது நடராசனின் மரணத்துக்குப்பின் வெளியாகிறதா என்று எனக்குத் தெரியவில்லை.
இவ்விதழில், அய்யாவின் அடிச்சுவட்டில் என்ற கீ.வீரமணி அவர்களின் தொடரும், நானும் இந்த நூற்றாண்டும் எனும் கவிஞர் வாலியின் தொடரும், திகசி, எம்விவி, சி.மோகன், மணா போன்றோரின் தொடர்களும், ராஜம் கிருஷ்ணனின் கோடுகளும் கோலங்களும், தமயந்தியின் லிலிபுட் மனிதர்கள், சுஜாதாவின் சின்னக் குயிலி போன்ற நாவல்களும் அப்போதைய இதழாசிரியராக பாவை சந்திரன் புதிய பார்வையை திறம்பட நடத்தி வந்தார். தனது கைவண்ணமாக திரு. பாவை சந்திரன் அவர்களும் ஒரு நாவலைத் தொடர்ந்து எழுதிவந்த வேளையில் இதழானது நின்று போகவே, அருமையான அந்த நாவலை அத்தோடு நினைக்கவில்லை; என்றாலும் அந்த எழுத்தின் தாக்கம் மனதில் இருக்கவே செய்தது. பின்பு ஒருமுறை முகநூலில் நண்பர் சுந்தரபுத்தன் அவர்கள் (அவரும் இந்த இதழில் பணியாற்றியிருக்கலாம், நினைவிலில்லை.) இந்த நாவல் தொடர்பாக பழைய புதிய பார்வை இதழ்கள் யாரிடமாவது உள்ளதா எனக் கேட்க (முகநூலில்), நான் என்னிடமிருந்த பல இதழ்களைச் சொன்னேன்; அவையனைத்தும் என்னிடம் உள்ளது. இரண்டாவதாக வெளிவந்தபோது வந்த தொடர்கள் வேண்டுமென்றார்; இல்லை என சொன்னேன். அவ்வளவுக்குப் பிரபலமான அந்த நாவல் தற்போது எனக்கு கொரட்டூர் நூலகத்தில் கிடைத்தது.
1890 – களில் துவங்கும் இந்த நாவல், நாடு 1947 - ல் சுதந்திரம் வாங்கும் வரையில் முதல் பாகமாக வழங்கப்பட்டுள்ளது. காமு என்கிற காமாட்சி. கதையின் நாயகி. கதையின் நாயகனாக இதில் யாரையும் குறிப்பிடுவது சரியாகாது. அவளது கணவனையேகூட அவள் வாழ்வின் அங்கீகரிக்கப்பட்ட ஒரு எதிரியாகவே காலம் வைத்திருக்கிறது. ஒரு பெண்ணுக்கு ஏற்படும் சகிப்புத் தன்மையே கதையின் மையப்புள்ளி. சகிப்புத்தன்மையும் துன்பமோ இன்பமோ வருகின்ற எதையும் புறந்தள்ளாமல் முதலில் சிறிது தயங்கி, பின்பு அதனை ஏற்றுக்கொள்ளும் பக்குவமும் பெண்மையைப் போற்றுகிறது. காமு இந்தக் காலத்துப் பெண் அல்ல; வெள்ளையர் நம் நாட்டை ஆண்ட ஒளியற்ற பாரதத்தில் பிறந்தவர்; படிப்பறிவற்ற, வெளியுலகத்தை அறிமுகப்படுத்தாத சமூகத்தில் பிறந்து, வாழ்க்கையில் தொடர்ந்து வரும் துன்பங்களைத் தாண்டி, குடும்பத்தை ஒன்றிணைக்கிறாள் காமு. வாழ்வின் ஒரு முக்கியமான பகுதியில் தன்னைக் கைவிட்டு ஓடிப்போன தன் கணவன் செயலால் சமூகத்தின் கேலிப் பார்வைக்கும் சிலரின் காம இச்சைக்கும் பதிலளிக்கும் விதமாகத் தன்னை ஒரு புதுமையானவளாகக் காட்டி, தன் குடும்பத்தையும் தன்னைச் சரணடைந்தவர்களையும் அரவணைக்கும் அன்னையாய் ஜொலிக்கிறாள்.
ஜாதகம் பொருந்தாத காரணத்தினால் தள்ளிக்கொண்டே சென்றது காமுவின் திருமணம்; பொறுத்தமான ஜாதகம் வந்தது, ஆனால், இரண்டாம் தாரமாக; பிரசவத்தின்போதே தாயை இழந்து, கஷ்டப்படும் குழந்தைக்காக மற்றவர்களின் வற்புறுத்தலுக்காகவே திருமணம் செய்துகொள்வதுபோல நடந்து கொள்ளும் சுப்பிணி; நிலம்நீச்சு வசதிகளுக்குப் பஞ்சமில்லை அவனுக்கு. தாய் தந்தையின் கஷ்டங்களைப் போக்கும் விதமாக இந்தத் திருமணத்திற்கு காமு உடன்பட்டு, கல்யணமும் நடந்தேறியது. சுப்பிணியின் குழந்தையைத் தன் குழந்தையாகவே ஏற்றுக்கொள்கிறாள் காமு. இதிலிருந்து தொடர்கிறது காமுவின் செயல்திறனும் சகிப்புத் தன்மையும்.
காமு தன் தலைப் பிரசவத்திற்குத் தாய்வீடு சென்ற சமயம் சுப்பிணி ஒரு மீனவப் பெண்ணைத் தன் வசப்படுத்திக் கொண்டான். அவள் மகனுக்கும் வெளியில் அறிவிக்காத தகப்பனான். இப்படி ஒவ்வொரு கட்டத்திலும், அதாவது அவன் ஊரில் நடந்த ஒரு கொலையின்போது தலைமறைவாய் தென் ஆப்பிரிக்காவில் இருந்த பதினைந்து – இருபதாண்டுக் காலத்தில்கூட தனக்கென ஒரு குடும்பத்தை உண்டாக்கிக் கொள்ளத் தவறியதில்லை. இவன் தலைமறைவாய் ஆகும் சமயத்தில் காமு இரண்டாவது கருவை வயிற்றில் சுமக்கத் தொடங்கினாள். ஓடிய சுப்பிணி பின்பு பல வருடங்கள் கழித்து வசதி வாழ்க்கையுடன் ஒரு குடும்பத்தோடு நாகப்பட்டினம் வருகிறான். இதன் நடுவே அப்பனுக்குப் பிள்ளைத் தப்பாமல் பிறந்தவனாக, தன் அத்தையிடம் வளர்ந்த மூத்த தாரத்து மகன் குழந்தைவேலு ஊரைவிட்டு ஓடிப்போகிறான். பர்மாவிற்குச் சென்று அங்கிருந்து உலகப்போரின் காரணமாக கால்நடையாகவே மீண்டும் இந்தியாவிற்கு, நாகைக்கு வருகிறான்.
இப்படிப் பல சிக்கல்களைக் கொண்ட தன் வாழ்வை எப்படித் திறம்பட நடத்தினாள் காமு என்பதே இக்கதையில் முக்கியம். இரண்டாவதாக முழுகாமல் உள்ள காமுவை – கணவன் ஓடிவிட்ட நிலையில், தங்கள் ஊருக்கே சென்றுவிட பெற்றோர்கள் அழைத்த போதும், தங்கள் நிலத்தை பண்ணையாள் மூலமாக தானே முன்வந்து விவசாயம் செய்த போதும், கடல் சீற்றத்தின்போது வயலில் உப்புத் தண்ணீர் நுழைந்து விவசாயம் பொய்த்த போதும், தன் எதிரில் நின்ற மீனவப் பெண்ணின் மகன் சுப்பிணியை உறுதிப்படுத்திய போதும், வேட்கைக்கு இணங்காததால் கணக்கனின் மறைமுக தொல்லைகளை சந்தித்த போதும், நட்புக்காக தன் விதவைத் தோழியின் பிழைப்புக்கு வழிகாட்டிய போதும், பலகாலம் கழித்துத் திரும்பிய கணவன் இச்சைக்கு ஏங்கிய சமயம் அவள் எடுத்த நிராகரித்தலின் போதும் காமு எங்குமே தடுமாறியதில்லை; தடம் மாறியதில்லை. இதன் பிறகும் பல துன்பங்களை சந்தித்த அவளுக்கு சில ஆறுதல் தரும் மனிதர்களும் உண்டு; அவ்வகையில் சுப்பிணியின் தங்கை லட்சுமி (காமுவின் நாத்தனார்), அவனது முதிய நண்பர் மாணிக்கம்பிள்ளையும் அவரது மனைவியும், பஞ்சாங்கக்காரர் குடும்பமும் தான்.
கதைக் களம் நாகப்பட்டினம் மற்றும் அதன் கரையோர கிராமங்களே. இக்கதையின் போக்கிலேயே இயல்பாகவே ராஜாஜி கலந்துகொண்ட உப்புச் சத்தியாகிரகப் போராட்டம், ரயில்வேத் தொழிலாளிகளின் போரட்டமும் நுணுக்கமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பர்மாவிலிருந்து கால்நடையாக வந்த அகதிகள் வரும்வழியில் பட்ட இறப்புகள் இழப்புகள் வலிகள் பலவற்றை ஆசிரியர் பதிவு செய்திருப்பது அருமை! ஆகச் சிறந்த இந்த நாவலை (836 பக்கங்கள்) வாசித்துணர்ந்தேன். இக்கதையின் நாயகி எந்த இடத்திலும் உயர்ந்தே காணப்படுகிறார். அடுத்த பாகம் வெளியாகி உள்ளதா என்பது எனக்குத் தெரியவில்லை. கிடைத்தால் அனுப்புங்கள் படித்துவிட்டுத் தருகிறேன். நான் எழுதிய இவைகள் விமர்சனங்கள் அல்ல; வாசிப்பின் சுவையை என்னளவில் விளம்புவதே! நீங்களும் வாசித்துப் பாருங்கள்.

எல்லா உணர்ச்சிகள

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக