"கதையல்ல வரலாறு"
கட்டுரை; ஆசிரியர்: நாகரத்தினம் கிருஷ்ணா
கதையல்ல வரலாறு 100 பக்கங்கள் கொண்ட ஒரு சிறு கட்டுரை நூல்தான்; என்றாலும் வரலாறுகளின் வரலாற்றை அழுத்தமாக அழகாகத் தொகுத்தளித்துள்ளது. வரலாற்றிலிருந்து கதைகள் வருவது இயல்பானது; ஆனால், நம்மவர்கள் புனைவுகளையே வரலாற்றின் அங்கமாக்கி விடுவார்கள்; எத்தனையோ ஆளுமைகளின் வரலாறு பலவாறாகத் திரிக்கப்படுவதை விவரமாக எடுத்துக்காட்டும் இந்நூல், அக்கட்டுரையின் ஆய்வு முடிவை- உண்மையை நாமே தெரிவு செய்துகொள்ளும் வாய்ப்பளிக்கிறது.
நற்றிணை வெளியீடான இப்புத்தகத்தை புதுச்சேரியைப் பூர்வீகமாகக் கொண்ட பிரஞ்சு தேசத்தில் வசிக்கும் திரு.நாகரத்தினம் கிருஷ்ணா எழுதியிருக்கிறார். சிறுகதைத் தொகுதிகள், கட்டுரைத் தொகுப்புகள், பிரெஞ்சிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்புகள் பலவற்றையும் அளித்துள்ள இவர், நீலக்கடல் மற்றும் மாத்தா-ஹரி என்ற இரண்டு நாவல்களையும் எழுதியுள்ளார். பிரெஞ்சிந்திய (புதுச்சேரி) வரலாற்றைப் பற்றியும் பல ஆய்வுகளை அளித்துள்ளார்.
'கதையல்ல வரலாறு' எனும் இக்கட்டுரை நூலில், இக்கட்டுரைகள் வரலாற்றுப் புரிதல்களைத் தருவதோடு பல தரவுகளோடும் மிகவும் சுவாரசியமாகவும் இருக்கிறது. அதோடு உண்மையை விளங்கத் தருவதும் இதன் சிறப்பாகும். இரண்டாம் உலகப் போரின்போது, ஹிட்லருக்குத் தெரியாமலே, அவரது நண்பர் ரூடால்ஃப் ஹெஸ், நாஜிக்களுக்கு ஆதரவாக, போர் நிறுத்தம் செய்ய வேண்டி, இங்கிலாந்திடம் ரகசியமாக இரவல் விமானத்தில், பிரிட்டிஷ் வான்படைகளுக்கும் சிக்காதவண்ணம் தூது போனது ஏன்? ஹிட்லருக்குத் தெரியாமல் இது நடந்திருக்குமா? அதன்பின் ஹெஸ் காணாமல் போய்விட்டார் என ஜெர்மனி அறிவித்ததன் நோக்கம் என்ன? படிக்கப் படிக்கப் பல தொடர் கேள்விகள் உருவாகி, கடைசியில் தன் சோக முடிவைத் தானே தேர்ந்தெடுக்கும் நிலை ரூடால்ஃப் ஹெஸ்-க்கு ஏற்பட்டதே மிச்சம்.
இரண்டாவது கட்டுரை ஃப்ரெஞ்சு ஆளுகைக்கு உட்பட்ட புதுச்சேரியில், துபாஷாக நைனியப்பப் பிள்ளைக்குப் பதவி கொடுத்தவர் கவர்னர் ஆந்த்ரே எபேர். அவர் தனது மகனுடன் சேர்ந்து நைனியப்பப் பிள்ளையின் மீது குற்றம் சுமத்துவதும் பின்பு நைனியின் மகன் குருவப்பப் பிள்ளை, பாரீஸ்-க்குச் சென்று, தந்தைக்காக வாதாடியதோடு, இழந்த பல சொத்துக்களையும் அரசிடமிருந்து மீட்டு, பின்பு தானே துபாஷாகவும் வருவதும், அன்றைய ஃப்ரெஞ்சு அரசின் ஆட்சியினை விவரிப்பதாகும்.
மூன்று மற்றும் நான்காவது கட்டுரைகளில் ரஷ்யாவின் ஆளுமை ஸ்டாலின் பற்றிய மரணத்தின் மர்மங்களை அலசுவதும், ஹிட்லரது வாழ்வின் கடைசி தருணங்களை விவரித்திருப்பதும் அதில் ரஷ்யாவின் கடைசி நிலைப்பாடும் மிக முக்கியமான பதிவுகள் என்றே சொல்ல வேண்டும். நாம் தவறவிடக் கூடாத ஒரு நல்ல புத்தகம் 'கதையல்ல வரலாறு'
20/12/2020 அன்று டிஸ்கவரி பேலஸ் புத்தகக் கடையில் சிறப்புக் கண்காட்சி, திரு வைரமுத்து அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. அன்று இந்த புத்தகத்தைத் தேர்ந்தெடுத்து வாங்கினேன்; விலை 80ரூ.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக