1977 பள்ளி அனுபவம்
முதன்முதலாக பள்ளிக்கு பேருந்தில் பயணம்! 1977.
சென்னை அண்ணா நகர் மேற்கு முதல் பாரிஸ் வரை; பேருந்தின் தடம் எண்: 7/C. இதில் எனது பயணம் திருமங்கலத்திலிருந்து பூக்கடை காவல் நிலையம் வரை. அதன் பின்னால் இன்றும் பழைய பச்சையப்பன் கல்லூரிப் பள்ளி என்றழைக்கப்படும் அதில்தான் 9-ம் வகுப்பில். பயண நேரம் அந்நாளையில் 45 நிமிடம்; பயணச் சீட்டு 35 அல்லது 50
பைசா. அரும்பாக்கத்தில் – முந்தைய பள்ளியில் படித்த நண்பன் ஒருவனுக்காக, நானும் அந்தப் பள்ளியில்தான் படிப்பேன் என அடம்பிடித்துச் சேர்ந்தேன்; ஆனால், எதிர்பாராமல் அவனுக்கு 9/D பிரிவும் எனக்கு
9/G பிரிவுமாக வகுப்பு மாற்றம் நடந்துவிட்டது.
சென்னை, பச்சையப்பன் கல்லூரிப் பள்ளி. இன்று பூக்கடை காவல் நிலையத்தின் பின்னால், அதே என்.எஸ்.சி. போஸ் சாலையில், முன்புறம் பல வணிகக் கடைகளால் மறைக்கப்பட்டு இப்போதும் இயங்கி வருகிறது. இங்கு மேல்நிலைக் கல்வியோடு வகுப்புகள் முடிகிறது. இது முதலில் கல்லூரியாகத்தான் துவக்கப்பட்டது; பின்னர் இட நெருக்கடி காரணமாக, அமைந்தகரை அருகே, பெரியதாகக் கட்டப்பட்டு இயங்கி வருகிறது.
பேருந்தில் பள்ளிக்குச் செல்வது என்பது, அந்த நாளில் எனக்கெல்லாம் பெருமகிழ்ச்சிக்குரிய ஒன்று. அன்றைய நாளில், தூக்கத்தில் வரும் கனவுகள்கூட, இளவரசனுக்கானது. இன்றும்கூட பயணம் என்றால் எனக்குத் தனிவிருப்பம்தான்; இப்போதெல்லாம் பேருந்தைவிட, ரயில் பயணம் அல்லது கார் பயணம்தான் அதிக விருப்பம். நண்பர்களுடன் சேர்ந்து என்றால், சுற்றுலா வாகனங்களில் செல்லவும் விருப்பம். காலை 9 மணிக்குப் பள்ளி துவங்கி மாலை 3 மணிக்கு முடியும். காலை 7.45 மணிக்கெல்லாம் தயாராகி 7/C வண்டியைப் பிடித்து, ஓட்டுநர் அருகே முன் பக்கத்தில் இடம் பிடித்து அமர்வது வழக்கம். அறிமுகமான ஓட்டுநர் என்றால் எனக்காகவே முன் இருக்கையில் யாரும் அமராமல் பார்த்துவிட்டு, நான் வந்தவுடன் எனக்குத் தருவார். அண்ணா நகர் மேற்கிலிருந்து அடுத்த நிறுத்தம் நான் ஏறும் திருமங்கலம்தான் என்பதால் அது ஒரு வசதி. எனது தோற்றமே அப்பாவிப் பிள்ளைபோல் இருப்பதாலோ என்னவோ, உடல் அமைப்பும் ஒல்லியானதுதான். அந்த நேரத்தில் கூட்டம் அதிகமாகப் பேருந்தில் ஏறும். அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் கல்லூரி மாணவர் மாணவியரும் வயதானவர்களும் ஒரே சமயத்தில் முண்டியடித்து ஏற வேண்டும். அடுத்த நிறுத்தமான 11-வது மெயின் ரோடு, போஸ்ட் ஆபீஸ், ப்ளூ ஸ்டார், அண்ணா நகர் டவர் மற்றும் அண்ணா நகர் செல்வதற்குள் பேருந்து நிரம்பி வழியும். பெரும்பாலான மாணவர்கள் படியிலேயே பயணத்தை மேற்கொள்வார்கள்; அவர்களது புத்தகப் பைகளை என்னைப்போல இருக்கைவாசிகளிடம் ஒப்படைத்துவிடுவார்கள்; சிலருக்கென்று தான் விரும்பும் காதலிகள் (அவர்கள் விரும்புகிறார்களோ இல்லையோ இவர்கள் மடக்க முயல்வார்கள்; அதனால் மடக்குதல் என்ற சொல்லே இங்கு பயன்படுத்துவார்கள்) இருக்கையில் அமர்ந்திருப்பார்கள்; அவர்களிடம் புத்தகப் பைய்யை கொடுத்து விடுவார்கள். படியில்தான் பயணம் என்பதில்லை; தனது காதலி பேருந்தின் நடுவே இருந்தால் இவர்களும் அதை ஒட்டிய கம்பிகளைப் பிடித்துத்தான் தொங்கிக் கொண்டு வருவார்கள். முக்கிய இடங்களில் காவலர்கள் அடித்து உள்ளே ஏறச் சொல்வார்கள். அல்லது பிடித்து அபராதம் கட்டச் சொல்வார்கள். என்றாலும் படிப் பயணம் தினம் தொடரும்.
பணியிடத்திற்கு அவசரமாகச் செல்பவர்களைவிட, படியில் பயணம் செய்வோரில் இன்றும்கூட பள்ளி கல்லூரி மாணவர்களே அதிகம்; எங்களில் பலரும் அவரவர் விருப்பமான – விரும்புகிற - மாணவியரை, ஏறுமிடத்திலிருந்து அவர்களின் பள்ளிவரையில் சென்று, Card அடித்துவிட்டுத்தான் தங்களது பள்ளிக்கோ அல்லது பணியிடத்துக்கோ அல்லது வீட்டுக்கோ திரும்புவார்கள். இந்த வேலைக்கு கார்ட் அடிப்பது என்று பெயர். மாலை வீட்டருகே நண்பர்கள் ஒன்று கூடும்போது, கேட்கப்படும் முதல் கேள்வியே, “என்ன மச்சான் இன்னைக்கு கார்ட் அடிச்சியா?” என்பதுதான். அடுத்தவன், “ஏன் மச்சான் இன்னைக்கு கார்ட் அடிக்கல போல; நீ வரலன்னதும் உன் ஆளு தவிச்ச தவிப்பப் பாக்கவே இல்லையே! அப்புறம் நாந்தான் சொன்னேன். ஒரு இன்டர்வியூவுக்கு அம்பத்தூர் வரை போயிருக்கான்; நாளைக்கு வந்திடுவான்”னு.
இந்த ‘சுந்தர பாண்டியன்’ பட சீனெல்லாம் எங்காளுங்க அப்பவே போட்டவிங்க. நான் ஒண்ணும் யோக்கியன் இல்லீங்க. என்னோட நோஞ்சான் ஒடம்புக்கு, நின்னுகிட்டு பயணிக்கவே கஷ்டம்; இதுல நான் எங்கேருந்து படியில பயணம் பண்றது? ஆனா, அவங்களுக்கான உதவி நிறைய செய்வேன். தொங்குறவுங்க சாப்பாடு பை, அவுங்க புத்தகத்த வாங்கி வைக்கிறது, தூரத்துல ஸ்லீபோ இருந்தா, (ஆதாங்க போலீஸ்) ‘கோபால் தொங்குறியா’ அப்படின்னு குறிப்பால சொல்லி, மேல ஏறி வரச் சொல்றது, இந்த மாதிரி சேவையெல்லாம் செய்வேனுங்க.
டோமினிக் கட்டையா குட்டையாக, 7/C ரூட் பஸ் டிரைவர்; நல்ல வேகம் ஓட்டக்கூடியவர். காலையில் அவருடைய வண்டியில் பள்ளி செல்வது எனக்கு விருப்பம்தான், என்றாலும் என் நண்பர்களுக்கு மிகவும் எரிச்சலானது. படிப்பயணத்தில் உள்ளவர்களை எந்த நாளிலும் ஏசுவதோ பேசுவதோ வைத்துக் கொள்ள மாட்டார். பக்கவாட்டுக் கண்ணாடியை அடிக்கடிப் பார்த்தவண்ணமே, எவனாவது விழுந்து தொலைக்கப் போகிறான் என எச்சரிக்கையுடன் ஓட்டுவார். அப்படிப்பட்ட அவர் சில நேரம் வேகத்தைக் குறைத்து, பக்கவாட்டு வண்டிகளின் மீது தொங்குபவர்கள் இடிபடும் அளவுக்கு ஓட்டி பயத்தைக் காட்டுவார்; ஆனால், அவர்களா கலங்குவார்கள்; ஒரு போதும் இல்லை. திருமங்கலம் முதல் அண்ணா நகர் ரவுண்டானா வரை சாலை மிகவும் அகலமானது. மழைநாளில் சாலையின் மைய்யத்திலிருந்து வலது ஓரம் வரை அரை அடிக்கும் மேலாக மழைநீர் தேங்கி இருக்கும். நேராகப் பேருந்தை ஓட்டிக் கொண்டிருக்கும் டோமினிக், திடீரென பக்கவாட்டில் தேங்கிய தண்ணீரில் வேகமாக செலுத்தி, ஒரு ஐந்து மீட்டர் தூரத்தில் சரியான சாலைக்கு வந்துவிடுவார். இதற்குள் படியில் உள்ள அனைவரும் நனைந்து விடுவார்கள். மிகக் கேவலமாக டோமினிக்கைத் திட்டுவார்கள் அனைவரும்; அவர் கண்டுகொள்ளவே மாட்டார்.
டோமினிக் ஒரு ரகம்; சரி நம்ம அஹமது பாய் எப்படின்னு பார்ப்போம். நல்ல ஒரு கம்பெனியில் (வெளிநாடு என்று நினைவு) ஓட்டுநராகப் பணிபுரிந்து ஏதோ சூழ்நிலை காரணமாக புதியதாக, பல்லவன் போக்குவரத்துக் கழகத்தில் சேர்ந்தார். அமைதியானவர். எப்போதும்போல் ஓட்டுநர் அருகே இடம்பிடித்து நான் அமர்ந்தேன். அப்போதெல்லாம் அரசுத் தொலைக்காட்சியில் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலையில் தமிழ்ப் படங்கள்
போடுவார்கள்; அந்தப் படம் முடிய இரவு
பத்து மணிக்கு மேலாகிவிடும்; சரியாக படம் முடிய பதினைந்து நிமிடங்களே இருக்கும் சமயத்தில், விளம்பரங்களுடன், மத்திய ஒளிபரப்பு என்று சொல்லி, ஆங்கில மற்றும் ஹிந்தி செய்திகளை வாசித்துவிட்டுக் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக, தமிழ்த் திரைப்படத்தை நிறுத்திவிடுவார்கள்; இவையெல்லாம் முடிந்து மீண்டும் படம் துவங்கி, முடிந்து நாமெல்லாம் உறங்கச் செல்ல, ஒரு மணிக்கும் மேல் ஆவதுண்டு; இதில் தூக்கம் கெட்ட நான், அண்ணாநகர், சிந்தாமணி செல்வதற்குள் லேசாக உறங்கத் தொடங்குவேன். உடனே, டிரைவர் அஹமது அண்ணன், “ஏய் வண்டியிலத் தூங்காதே” குரல் கொடுப்பார். நானும் கட்டுப்படுத்திக்கொண்டு இருப்பேன். ஒரு சில நாட்கள் சென்றது. ஒரு நாள் காலை அவரது பேருந்தில் ஏறிப் பயணம் செய்தபோது, அண்ணாநகர் டவர் அருகே வண்டி செல்லும்போது, “ஏய் வண்டியிலத் தூங்காதே” என்று சத்தமிட்டார் அஹமது; நாமளும் தூங்கல வேற யாரும் தூங்குற மாதிரியும் தெரியல, எதுக்கு இந்த ஆளு அடிக்கடி இந்த மாதிரி திட்டிக்கிட்டே வராறுன்னு முனகிட்டே இருந்தேன். திரும்பவும் பாய், “ஏய் வண்டியிலத் தூங்காதே” என்றார். எனக்கு கோபம் வந்து நான் அவரை மரியாதையுடன் திட்ட, நடத்துனர் வந்து விசாரித்து, தம்பி அவருக்கு தமிழ் சுத்தமா தெரியாது; ஒண்ணு ரெண்டு புரியும் பேசுவாருன்னு சமாதானம் செஞ்சப்பதான் அஹமது பாயும் “நான் உன்ன ஒண்ணுமே சொல்லலே, அங்கப் பாரு ஸ்டெப்புல தூங்குறான் எத்தினி பேரு.” அடப்பாவி மனுஷா இத்தனை நாளா படியில தொங்குறவனத்தான் தூங்காதேன்னு சொல்லி வந்தையா… எனக்குக் கூச்சமாகிவிட்டது எல்லோரின் குறுநகைப் பார்வையால். அஹமது சொன்னதும் சரிதான்; படியில தொங்குறது மட்டுமில்லங்கோ தூங்குறதுகூட தப்புத்தானே… அப்புறம் முழுசாத் தூங்க வேண்டியதுதான்…சங்கூதி… சடங்கோட…
இப்போதுதான் பேருந்து அண்ணா நகர் ரவுண்டாணாவைக் கடக்கிறது; இதன் இடையில் அண்ணா நகர் டவர் இருக்கிறது. அதை ஒரு பார்வைப் பார்த்துவிடுவோமே; ஏன்னு கேட்டா அது பல்லவனோட
7/c பஸ் ரூட்டுக்கு 3வது ஸ்டேஜ்; நடத்துநர் டிக்கெட் போட வேண்டாமா?
விஸ்வேஸ்வரய்யா டவர் எனப்படும் இந்தக் கோபுரம் முதன்முதலில் சென்னைக்கு சற்று வெளியே உலக வர்த்தகச் சுற்றுலா பொருட்காட்சி நிகழ்வினை பிரம்மாண்டமாக நடத்தி, அந்த இடத்தையே அன்றைய முதல்வர் அண்ணாவின் பெயரில், அண்ணாநகர் எனும் நகரை உருவாக்கியது தமிழக அரசு. அந்த பொருட்காட்சியின் ஒரு நினைவாக உருவாக்கப்பட்டது தான் இந்த அண்ணாநகர் கோபுரம் அல்லது டவர் (TOWER). இன்னும் விரிவாக இந்த டவரைப் பற்றிய பதிவு ஒன்று தனியே வழங்க விருப்பம். பேருந்து புறப்படத் தயாராகிவிட்டது.
அண்ணாநகர் ரவுண்டாணா வந்துவிட்டோம். இறங்கும் அளவுக்கு ஏறும் பயணிகளும் உண்டு. இவ்விடத்தில் பயணச்சீட்டுப் பரிசோதகர் வந்து நமது நேரத்தை வீணடிப்பார். வண்டி மெதுவாக சிந்தாமணி பஸ் நிறுத்தத்தைத் தாண்டி நிற்கும்; காரணம், அங்கே காத்திருக்கும் கூட்டம். அடுத்து கல்லறை தாண்டி, கீழ்ப்பாக்கம் கார்டன் வரும்; ஏறுவோரும் இறங்குவோரும் சரிவிகிதம். ஆனால், ஒன்று இங்கிருந்து படியில்
பயணம் செய்து வந்தவர்கள் சற்று மேலே அல்லது வண்டியின் உள்ளே சென்றுவிட வேண்டும். இது எழுதாத சட்டம். இதற்குக் காரணம் அருகே உள்ள டி.பி. சத்திரம் எனும் பகுதியின் மாணவர்களே!
தாண்டவராயன் பிள்ளை சத்திரம் என அழைக்கப்படும் இப்பகுதியினரில் சிலரின் முரட்டுச் செயல்பாடுகள் தொடர்ந்து இப்பேருந்தில் வரும் பயணிகளுக்குத் தெரியும். எனவே, எங்கள் பகுதி மாணவர்கள் அவர்களோடு நட்புக் கொண்டு, சற்று அடக்கி வாசிப்பார்கள். சரியான நெரிசலுடன் வண்டி கெல்லீஸ் நுழையும். கெல்லீஸ் நிறுத்தத்தில் யாரும் அதிகமாக ஏற மாட்டார்கள்; ஒரு காலத்தில் ஆங்கிலோ-இந்தியர்கள் பரவலாக இருந்த, சர்ச்சுகள் பல கொண்ட இந்த இடம் 1970-களில் வடஇந்திய வர்த்தகர்களின் வசமாக மாறத் தொடங்கி 1980-களில் இங்கிருந்து புரசைவாக்கம், டவ்டன், பூங்காநகர் என வடசென்னை வரை அவர்கள்தான் என மறைமுக எல்லை வந்துவிட்டது. எனவே, இங்கு பெரும்பாலும் அரசு பேருந்துகளில் ஏறுபவர்கள் குறைவே. இப்போது வர்த்தகம் களைகட்டும் இடமான புரசைவாக்கத்தில் வண்டி நிற்கும். இங்கிருந்து இறங்குமுகம்தான். நன்றாக மூச்சுவிட முடியும். அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இங்கிருந்து அதிகம் என்பதால், அவரவர் ஜோடிகளுடன் இறங்குவார்கள். அதேபோல் டவுட்டனிலிருந்து பெண்களை விரும்ப சேட்டைகளுடன் ஒரு கூட்டம் ஏறும்; இருந்தாலும், வாகனத்தில் நெரிசல் இருக்காது. அதேபோல், இவர்கள் படியில் நிற்காமல் மேலே வந்துவிட்டால், செங்கல்வராயா பாலி டெக்னிக் அருகே போலீஸ் காத்திருக்கிறது என்று அர்த்தம்; போலீஸ் நிற்பது இவர்களுக்கு எப்படித்தான் தகவல் வருமோ?
அதன் பிறகு பேருந்து, சென்ட்ரல் வழியாக, பூக்கடை காவல் நிலையம் அருகே நிற்கும்; வாகனம் காலியாகும். இப்போது பள்ளிக்கு வந்துவிட்ட நான், திரும்ப வீட்டிற்குப் போக வேண்டுமல்லவா; அந்தப் பதிவிலாவது சற்று சுவாரசியம் இருக்குமான்னு பார்ப்போம்!
மாலை பள்ளியிலிருந்து திரும்ப மீண்டும் 7C பேருந்தைப் பிடிக்க
வேண்டும். உயர்நீதி மன்றத்திலிருந்து அடுத்த பேருந்து நிறுத்தம்
பூக்கடைக்காவல் நிலையம்தான்; தூரம் அதிகமில்லை; அதனால் சில இருக்கைகள் காலியாகவே இருக்கும். அந்தக் காலகட்டத்தில்
சென்னை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளுக்கு மளிகைப் பொருட்கள், காய்கறிகள், தொழில் உபகரணங்கள், முக்கிய மூலப் பொருட்கள் அனைத்தும் பூக்கடையைச் சுற்றியுள்ள கொத்தவால் சாவடி,
ரத்தன் பஜார், சௌகார் பேட்டை, தங்கசாலை, மூர்மார்கெட் ஆகிய பகுதிகளிலிருந்து மார்கெட்
அல்லது மொத்த விலைக்கும் சில்லறை விலக்கும் வியாபாரிகளுக்குக் கிடைக்கும். சென்னையின் முக்கிய மத்தியப் பேருந்து நிலையமும் இங்கிருந்துதான் இயங்கியது.
பின்னால் அவை கோயம்பேட்டிற்கு மற்றப்பட்ட்து. அதே
சமயம் பூக்கடையிலிருந்து அதிகமான சில்லறை வியாபாரிகள் சில மூட்டைகளுடன் ஏறுவார்கள்;
இவர்களுடன் போட்டியிட்டுத்தான் மாணவர்கள் நாங்கள் ஏறி இருக்கை பிடிப்போம்.
மூன்று மணிக்குப் பள்ளி விட்டதும் வீட்டிற்குச் செல்ல வண்டியேறும் மேல்வகுப்பு
மாணவர்களுக்கு காலையில் இருந்த புத்துணர்ச்சியும் ஆர்வமும் சைட் அடிக்கும் எண்ணமும்
வருவதில்லை; காரணம் காலையில் ஒரே பேருந்தில் ஒன்றாக வரும் தேவதைகள்
அனைத்தும் மாலையில் ஒரே சமயத்தில் வருவதில்லை – அவர்களின் பள்ளி
விடுகின்ற நேரத்தைப் பொறுத்து எல்லாம் மாறுபடும்.
அதனால் திரும்புகின்ற நேரத்தை, பள்ளியில் இடம் பெற்ற
வகுப்புச் சம்பந்தமான பாடப் பரிமாற்றம், காலையில் பேருந்தில்
நடந்த நிகழ்வுகள், தங்கள் காதலியுடன் ஏற்பட்ட நெருக்கம்,
ஒரு தலைக் காதலன் ஒருவனுக்கு புதிய குறிப்புக் காட்டியக் காதலி பற்றிய
பல விஷயங்கள் அவரவர் குழுக்களின் தன்மைக்கேற்ப அலசுவார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக