பிடித்த வரிகள்
வணிகத் தலைமைகொள்
ராம்வசந்த்
எனக்கு மட்டுமல்ல
முகநூலில் உள்ள அத்தனை நண்பர்களுக்கும் ஒரு பெரிய ஆச்சரியம்! ‘வணிகத் தலைமைகொள்’ எனும் வியாபாரம்
தொடர்பான ஒரு தொடர், வார இதழான ஆனந்த விகடனில் வெளியாகியது; அதில் ஒரு
ஆச்சரியம்! அந்தத் தொடரை எழுதிய எழுத்தாளரை எண்ணும்போது ஏற்பட்டது. அவரது அன்றாட
முகநூல் பதிவுகள், கவிதைகள், நகைச்சுவை மற்றும்
தனக்கென ஒரு பாணியில் திரைப் பாடல்களைப் பாடுவது போன்ற செயல்பாடுகளைக் கொண்டிருந்த
இவரா இப்படி ஒரு வணிகத் திறனை அளிக்கும் ஒரு சிறப்பான கட்டுரை எழுதி வருகிறார் என்கிற
ஆச்சரியமே அது. அவர் மிக நேர்த்தியான சமூகக் கவிதைகளையும் காதல் கவிதைகளையும்
என் போன்ற எளிய வாசகனும் அறியும்வண்ணம் எழுதுவதில் வல்லவர்தான்; அதில் ஆச்சரியம்
இல்லை. நல்ல பதிவுகளையும் பதிபவர்; அதிலும் ஆச்சரியமில்லை. குறிப்பாக, நண்பர்களைக்
கைக்கொள்வதில் அவருக்கு நிகர் அவரே! அவர் ஒரு நிறுவனத்தை
வெளி மாநிலத்தில் திறம்பட நடத்தி வருவதும் நாம் அறிந்ததே. ஆனால், இவ்வளவு நுட்பத்துடன்
இப்படி ஒரு கட்டுரைத் தொடரை எழுத இயலுமா? அனுபவம் அதிகம் இருப்போரும்
எளிய விதத்தில் புரியும் அளவுக்கு சொல்ல முடியுமா? இதுவே நமது
ஆச்சரியம்! வணிகம் என்பதே அதிகம் பொய் கலந்ததே என்ற எண்ணத்தை உடைக்கும்வண்ணம்
தனது நிறுவனத்தின் மூலம் பெற்ற அனுபவத்தையும் முன்னேற்றத்தையும் வைத்து, 1. தொழிலை நேசி, 2. செலவைச் சுருக்கு, 3. நம்பிக்கைதான்
வணிகம் என மூன்று விதிகளைக் கொண்டு எழுதப்பட்ட அருமையான நூல் ‘வணிகத் தலைமைகொள்’ எனும் அந்த
நூல். அந்த நூலின் ஆசிரியர் நண்பர் ராம்வசந்த். இயற்பெயர்
ராமமூர்த்தி.
தற்போது ‘வணிகத் தலைமைகொள்’ தொடரை, விகடன் பிரசுரமே
வெளியிட்டு, முதல் பதிப்பு வெளிவந்து தீர்ந்துவிட்டது; அடுத்த பதிப்பு
விரைவில் வெளியாகும் என்று நம்புகிறேன். ராம்வசந்தின் இந்த
நூல் வாசகர்களிடையேயும் வணிகப் பெருமக்களிடையேயும் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது
என்பதில், அத்தொடரை விரும்பி வாசித்த எனக்கு அளவற்ற மகிழ்ச்சி!
v கார்ப்பரேட்களில்
நாம் ஒரு செங்கல். சிறு வாணிபத்தில் நாம்தான் கட்டடமே கட்ட வேண்டும்.
v தொழில் ஆரம்பித்த
முதல் நாளிலிருந்து இன்றுவரை ஒரு சுதந்திரத்தைப் பரிபூரணமாக அனுபவித்து வருகிறேன். எப்போதும்
அது என்னிடத்தில் இருக்கும். தொழில் முனைவோர் ஒவ்வொருவரிடமும் அது இருக்கும். அதுதான் ஆகப்பெரிய
சுதந்திரம், ஆனந்தம், உரிமை. அது…
decision freedom. ஆம், என் முடிவுகளை நான் எடுக்கும் சுதந்திரம்.
v பெரிதல்ல, சிறு வித்தியாசமும், நாம் காட்டும்
தனித்துவமும்கூட வாடிக்கையாளருக்கு நம் பொருளின் மீதான மதிப்பைக் கூட்டும். நம் மீதான
மதிப்பையும்…
v வெற்றியும்
தோல்வியும் வணிகத்தின் இரு பக்கங்கள்; இரண்டுமே முடிவல்ல, இடையிடையே
ஏற்படும் நிகழ்வுகள்தான்.
v வாடிக்கையாளர்
என்ன சொன்னாலும் ஏன் பயப்பட வேண்டும்? அதிகபட்சம் அவர் என்ன செய்ய முடியும்? உனக்கு ஆர்டர்
தரமாட்டார், அவ்வளவுதானே! மற்றபடி உன் வாழ்க்கையின்
எந்த விஷயத்தையும் அவரால் மாற்ற முடியாது. கேள்விகளை
பயமின்றி எதிர்கொள். ஆர்டர்கள் மட்டுமல்ல, உலகமே உன்னுடையது!”
v நாம் விற்கும்
பொருளுக்கு அதற்கேற்ற விலை கிடைக்கவில்லை என்றால், ஒன்று, பொருள் சரியில்லாமல்
இருக்க வேண்டும்; அல்லது, அதற்கேற்ற சரியான சந்தையில் நாம் இல்லாமலிருக்க வேண்டும்.
v ஆம், ஒரு தலைவன்
அந்த ‘presence of mind’ மற்றும் சட்டென முடிவெடுக்கும் திறனுடன் இருக்க வேண்டும், முடிவெடுக்கும்
திறனுள்ள தலைவன், ஒரு நிறுவனத்தை மேலே இட்டுச் செல்வான்.
v ஒரு நல்ல
தலைவன் தன் சகாக்களை அடிமையாக வைத்திருக்க மாட்டான். அவர்களையும்
தலைவனாக மாற்றுவான்.
v சௌகரிய நிலையிலிருந்து
வெளிவந்து நாம் வைக்கும் ஒவ்வோர் அடியும் சவால்
நிறைந்ததே, மறுப்பதற்கில்லை. ஆனால், வணிகத்தில்
அந்தச் சவால்கள்தான் வாய்ப்புகள்.
v வாய்ப்பு
எனும் கனி, சவால் எனும் மரத்தில் ஏறினால் மட்டுமே கிடைக்கும்.
v தரம் உயர்த்துதல்
வாடிக்கையாளரின் கவனத்தை நிச்சயம் பெறும். அவரின் நற்சொல்
பல வாடிக்கையாளர்களை நமக்குக் கொண்டு வந்து சேர்க்கும்.
v ஒரு நிறுவனத்தின்
தயாரிப்பு சிறப்பாக இருப்பினும், பணியாளர்கள் சிறப்பாக இருப்பினும், அதன் செயல்முறைகள்
சரியில்லையெனில் அந்த நிறுவனம் வீழ்ச்சிதான் அடையும்.
v வாடிக்கையாளரே
முதல் எனக் கருதும் மனிதனுக்கு, வாடிக்கையாளனும் முதல் இடத்தைத்தான் தருவான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக