
சிலிங்: நாவல்.
ஆசிரியர்: கணேச
குமாரன்
எழுத்து பிரசுரம்
வெளியீடு.
மனம் சம்பந்தப்பட்ட
நிலைத்தன்மை குறித்தான எளிதாக வாசிக்க முடிந்த ஒரு சிறு நாவல்தான் கணேசகுமாரன்
எழுதிய சிலிங்.
எனது வாசிப்பு
விதம்கூட ஒரு மனநோயோ என்னவோ? இன்றைய இளைய எழுத்தாளர்களின் நாவல்கள், சிறுகதைகள்,கவிதைகள் மற்றும்
புதிய இயக்குநர்களின் திரைப்படங்களைக்கூட நான் ஒட்டிச் செல்வதில்லை, அதாவது வாசிப்பது
இல்லை. பலபேர் எடுத்துச் சொல்லி, அந்தப் புத்தகத்தை நான் வாங்கிப் படிப்பதற்குள் 10 வருடங்களுக்கு மேலாகச்
சென்றுவிடும்; அப்போதுதான்
எனக்கு அவர்கள் புதிய எழுத்தாளர்கள் என்றே அறிவுக்கு எட்டுகிறது போலும்.
ஜெயகாந்தன், பிரபஞ்சன், தி.ஜா., ப.சிங்காரம்., கி.ரா., வ.நி., நீல.பத்மநாபன், விட்டல்ராவ், இராஜம்.கிருஷ்ணன், பூமணி, தோப்பில், ப.சிவகாமி, எஸ்.ரா., ஜெ.மோ., சாரு, ஈழத்தின் கே.டானியல், செ.க., போன்றவர்களையும், சாகித்ய அகாதமி விருது
பெற்ற தென்னக (குறிப்பாக மலையாளம், கன்னடம்) நாவல்களையும் மட்டுமே வாசிக்க விரும்பும்
எனக்கு பழமை மற்றும் தற்காப்பு மனநிலை உள்ளதெனவே நினைக்கிறேன். தற்காப்பு என்பது
விருது பெற்ற அல்லது பலராலும் விரும்பப்பட்ட புத்தகங்களை வாசிப்பதன் மூலம் மற்ற
தேவையற்ற நூல்களை வாசிப்பதிலிருந்து தப்பிக்கும் மனநிலை. இதுவும் ஒருவகை
மனநோய்தான் என்பது நோயாளியான எனக்கும் புரிகிறது. எனவேதான், இப்போதாவது, எனது நிலையில் புதிய
எழுத்தாளர்களான கணேசகுமாரன், கார்த்திக் புகழேந்தி, சரவணன் சந்திரன், விநாயக முருகன் மற்றும் கார்த்திக் பாலசுப்பிரமணியன்
போன்றவர்களைப் படிக்கத் துவங்கியுள்ளேன். இவர்களே புதியவர்கள் இல்லையே என்பவர்கள், எனது மனம் சற்று தெளிய
வந்துள்ளதை எண்ணி விவாதத்தைத் தவிர்க்க வேண்டுகிறேன். இனி இன்னும் புதியவர்களின்
எழுத்துதையும் வாசிக்கும் ஆவலுடன் நான். அதன் ஒரு துவக்கப் பாதையில் எழுத்தாளர் கணேசகுமாரன்
அவர்களின் இந்த சிறு நாவலை வாசித்த அனுபவத்தைப் பகிர்கின்றேன்! இது விமர்சனமல்ல; படித்ததை –
பிடித்ததைப் பகிர்ந்து கொள்வதுதான்.
வாழ்வின்
துரத்தல்களின்போது, நமது
நிலையற்ற மனம் தடுமாறி, ஏதோ
ஒன்றைப் பற்றுகின்ற வேளையில், அதுவும் பட்டுப்போய், நம் பிடியிலிருந்து நமக்குத் தெரியாமலே நழுவுவதுபோல…
மனதின் ஏக்கம் நம்மைப் புரட்டிப்போட்டு, திசைமாற்றுவது ஒன்றும் புதியதல்ல.
தனது மனநிலையைத்
தவறாகப் புரிந்துகொண்ட ஒருவன், ஒரு மனநல மருத்துவரிடம் சென்று தன்னைப் பற்றிச்
சொல்லி, உதவி
கேட்பதும், பின்பு
தற்கொலை முயற்சியில் இறங்குவதும் அதில் தோற்று, பின்பு கொரானா தொற்றிய நிலையில் சிகிச்சைக்காக
மருத்துவமனையில் சில நாட்கள் முடங்குவதும் இப்படி ஒவ்வொரு நிலையிலும்
மருத்துவரிடம் ஆலோசனை செய்யும் நாயகன் ஒரு புறம்.
அவனது கதையைக்
கேட்கும் மருத்துவர், தனது
வாழ்வில் தன்னால் நிகழ்த்தப்பட்ட தவறுகளால், குற்ற உணர்வு ஏற்பட்டுத் தனது மனநிலை பிறழ்ந்துவிடுமோ
எனும் அச்சத்தில் ஆழ்ந்துவிடும் மருத்துவர் ஒரு புறமும் என, எங்கோ உச்சியில்
கட்டப்பட்ட கயிற்றின் மீது இருவரையும் நடக்க வைக்கிறார் ஆசிரியர்.
மருத்துவரின்
டைரிக்குறிப்புடன், நாயகன்
மற்றும் அவனது மனைவி, மருத்துவரின்
மனைவி ஆகியோர் மருத்துவருடன் கலந்துரையாடல் செய்வதன்மூலமே கதையை நகர்த்திச்
செல்லும் வழி அருமை! ஒரு மனம் சம்பந்தப்பட்டக் கதையை அனைவரும் படிக்கும்வண்ணம்
எழுதும் கைவண்ணம் கணேசகுமாரன் அவர்களுக்கு உள்ளது. முடிவில் கொரானா நோயாளியின்
வேதனையையும் வெளிப்படுத்தியிருக்கிறார். சிறு நாவல் என்பதால் அதிக விவரணைகள்
தேவையில்லை; கணேசகுமாரனின்
சிலிங் நான் வாசிக்கும் அவரது முதல் நாவல். அனைவரும் வாசிக்க அன்போடு
வேண்டுகிறேன்!
எனது ஆருயிர் நண்பர்
முல்லைநாதன் அவர்களின் அருமையான சுருக்கமான உரையும் வலிமையானது.
இவண்,
தங்கவேல் ராஜேந்திரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக