ஞாயிறு, 20 அக்டோபர், 2013

உண்ணாவிரதம்

உண்ணாவிரதம்!
                                                       உண்ணாவிரதம் என்பது உணவருந்தாமல் இருப்பது; உணவு கிடைக்காமல் இருப்பவன் நிலை பட்டினி; அது விரதத்தில் சேராது.  உணவு கிடைத்தாலும் ஒருவன் ஒரு மாதத்தில் ஒன்றிரண்டு நாட்கள் உண்ணாவிரதமிருப்பது தனது உடலின் செயல்பாட்டை வளப்படுத்தவே! சிலர் விரதமிருப்பது ஒரு பிரச்சினையில் தனது கருத்தை வெளிக்காட்டவும் தன் மீது மற்றவர்களின் கவனத்தைத் திருப்பவும் தான்; ஆனால், ஒரு சிலர், தான் நியாயமாகக் கருதும் ஒரு கருத்தாக்கத்தை அது அனைவரும் ஏற்கத்தக்கதாக இருந்தாலும் அல்லது தன்னைச் சார்ந்தவர்கள் மட்டும் ஏற்கத்தக்கதாக இருந்தாலும் உறுதியுடன் பட்டினிப் போராட்டம் நடத்தி உயிரிழப்பு இல்லாமல் வெற்றியும் பெற்றனர்; தோல்வியும் அடைந்தனர்; மேலும் சிலர் உண்ணாவிரத பாதிப்பால் இறந்தபின் தன் கொள்கைக்கான பரிசினை வென்றெடுத்தனர். இந்த உண்ணாவிரதங்களில் சில நிபந்தனைகளுடன் ஒரு நாள் அடையாள அல்லது அதற்கும் மேற்பட்ட நாட்கள் என வரையறைகளுடன் மேற்கொள்ளப்படும்.

இதில் நகைச்சுவையான உண்ணாவிரதங்களும் உண்டு; 1989 ஆண்டு வரிசையில் என்று ஞாபகம். ஒருமுறை ஆளும் கட்சியை எதிர்த்து ஒரு நடிகர் ஒரு அடையாள உண்ணாவிரதம் இருந்தார்; பிரபலமான நடிகர் அல்லவா? அந்த நடிகர் எதிர்பார்த்ததைவிட கூட்டம் சற்று அதிகமாக கூடியது. சும்மா இருக்க முடியுமா? ஜனநாயக நாடாயிற்றே! விரதம் இருந்த அந்த நடிகரை எதிர்த்து, ஆளும் கட்சியைச் சார்ந்த மற்ற சில நடிகர்களை வைத்து உண்ணும் விரதம் என்ற புதுவகையான விரதத்தை நடத்தினர். அந்த உண்ணும்விரதத்தை முறியடிக்கும் வகையில் காலை முதல் மதிய உணவு வரை உண்ணாவிரதமிருந்து அண்டை நாட்டின் நடைபெற்ற உள்நாட்டுப் போரையே நிறுத்தித் தமிழர்களைக் காப்பாற்றினர் என்பது அதைவிட வேடிக்கை!

         நல்ல நோக்கத்தோடு துவங்கிய தோழர் தியாகுவின் உண்ணாவிரதமும் இப்படி ஆனதில் தான் நமது வருத்தம்!

 தோழர் தியாகு உண்ணாவிரதம் இருந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது அவரின் உண்ணாவிரதத்தின் முடிவுக்குப்பின் புலப்பட்டது. அவர் நிச்சயம் விளம்பரப்பிரியர் அல்ல; தனது தேவைக்காக கருணாநிதியையோ, கருணாநிதி அடிபணிந்திருக்கும்  மத்திய அரசையோ ஆதரிப்பவரும் அல்ல; பட்டினிப்போர் என்பதை இக்கால அரசுகள் கண்டுகொள்வதுமில்லை; இந்த பட்டினிப்போராட்டத்தால் அவரை இழக்கவும் யாரும் விரும்ப மாட்டார்கள்.

      தியாகு அவர்கள் ஈழத் தமிழருக்காக, இலங்கையில் காமன்வெல்த் கூட்டமைப்பின் நிகழ்ச்சி நடக்க இருப்பதைத் தடுத்து நிறுத்த உண்ணாவிரதம் இருந்தவர், அதை முடித்துக் கொண்டவிதம் கேலிக்கூத்தானது! இலங்கையிலே தமிழர்கள் கொத்துக்கொத்தாக கொலை செய்யப்பட்டு வந்த நிலையில் " அங்கே தமிழர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை" என தனது தூதரக, மற்றும் உள்துறை அமைச்சக அதிகாரிகளைக்கொண்டு ( இலங்கை அரசுக்கு இந்தியாவின் சார்பில் ஆயுதங்களையும் வழங்கிக்கொண்டே ) உண்மையை மறைத்த மத்திய அரசு, இப்போது தோழர் தியாகுவுக்கு உறுதி கொடுத்துவிட்டார்களாம் அவரது கோரிக்கை நிறைவேறும் என்று; நம்புவோம்; நம்பித்தொலைப்போம்!

       தோழர் தியாகு தனது போராட்ட முடிவிற்கு மேற்சொன்ன காரணத்துடன் அடுத்துச் சொன்னது இந்த நூற்றாண்டின் ஆகப்பெரும் நகைச்சுவையாகும்! " மத்திய அரசைச் சேர்ந்தவர்கள் பொய் சொல்லி எங்களை ஏமாற்றிவிட்டார்கள்!" என அந்த அரசில் அங்கம் வகித்துக்கொண்டே தங்களது சில மணிநேர உண்ணாவிரத நாடகத்தை நடத்தியவர்கள் மற்றும் அதன் தலைவர்களும் உறுதி கொடுத்தார்களாம் காமன்வெல்த் நிகழ்ச்சி சம்பந்தமாக நல்ல முடிவு மத்திய அரசு எடுக்குமென்று!

இந்த மட்டமான காரணங்களைக் காட்டுவதைவிட தியாகு அவர்கள்,  சுப.வீ,  திருமா,  மனு.புத்திரன் அவர்களைப்போல கலைஞரின் ஊதுகுழலாக அவரது மேடையில் வலம் வருவது நல்லது; இதற்குத் தனியொரு நாடகம் தேவையில்லை; அது இந்த காலகட்டத்தில் எடுபடாது. வரவர உண்ணாவிரதங்களின் முடிவுகள் இப்படி இருப்பதால்தான் அரசுகளும் கண்டுகொள்வதில்லை; மக்களும் சட்டை செய்வதில்லை.