ஞாயிறு, 21 ஜூலை, 2024

ஜெனரேட்டர்

நண்பர் ராம்வசந்த் அவர்களின் தொழில் தொடர்பான நேற்றைய பதிவொன்றைக் கண்டு, இதை எழுதுகின்றேன். 80-களில் ஜெனரேட்டர்களெல்லாம் சவுண்ட் ப்ரூஃப் ஆக வருவதில்லை; அப்படி வந்தாலும் அது மிகவும் அரிதாக வாங்கக்கூடியது; அதிக செலவாகக்கூடியது. அந்தக் காலக்கட்டத்தில், அரசின் BSNL டெலிபோன் அலுவலகங்களுக்கு பெரும்பாலும் கிரீவ்ஸ்காட்டன் ஒப்பன் டைப் DG-களையே (Diesal genaretor) அரசு வாங்கும்.


 நான் பெரும்பாலும் கிரீவ்ஸ்காட்டன் ஒப்பன் டைப் DG - களையே பணியிடங்களில் நிறுவி இருக்கிறேன்; மற்றபடி கம்மின்ஸ், கிர்லோஸ்கர், கேடர்பில்லர் DG- க்களையும் குறைந்த அளவில் அமைத்துத் தந்திருக்கிறேன். எனது பணி என்னவெனில், வெளியூர்களிலிருந்து லாரியில் அனுப்பப்படும் DG-யின் அளவுக்கேற்ற (மரக்கட்டை மற்றும் பலகைகளால் ஆனது) பெட்டியில் வரும் DG-யை அவர்கள் குறிப்பிடும் பணியிடத்தில் இறக்குவது, பின்பு வலுவான பிரத்தியேக காங்கிரீட் தளத்தில் அமர்த்தி நான்கு பக்கங்களிலும் ஒரு மீட்டர் அகல வழி இருக்கிறதா என அளந்து நிறுவி வைப்பது, எஞ்சினிலிருந்து தனியே வரும் டீசல் டேங்க்கை நிறுத்து இடத்தைத் தேர்வு செய்து, சைலன்சர் மற்றும் புகைப் போக்கியின் உயரம் மற்றும் தூரத்தைக் கணிப்பது, ஆக இவைகளுக்குத் தேவையான உபகரணங்களை கணக்கிட்டு, மேஸ்திரியிடம் கொடுப்பது போன்றவை, அதுமட்டுமல்ல, நிறுவப்பட்ட DG-யின் மின்னாக்கத்தையும் இயங்கும் தன்மையையும் பரிசோதனை செய்ய LOAD TEST செய்து அதை அரசு மின் ஏடி இன்ஸ்பெக்டரிடம் காட்டி, ஒகே சான்றிதழ் வாங்க வேண்டும். இதில் (Load Test) முடிந்ததும் எனது பணி நிறைவடையும். ஓரிரு நாட்களில் எனக்கான கூலித் தொகையும் சில பிடிப்புகளுடன் கொடுத்துவிடுவார்கள். அந்தப் பணமும் அடுத்த ஓரிரு மாதத்தில் கிடைத்துவிடும். இடையில் எனது முதலாளி ஓடி அலைந்து ஆர்டர்களைப் பிடிப்பதோடு, இனி பணிக்கான செலவு மற்றும் லாபம் நட்டம், காத்திருப்பு, அந்த பில்லை வாங்குவதற்கு ரெமி மார்ட்டின் முயற்சிகள் எல்லாம் அவருடையது.

     இப்படி ஒரு முறை 320 kva DG ஒன்று நிறுவ, சென்னை, குரோம்பேட்டை தொலைத் தொடர்பு நிலையத்துக்குச் செல்வதற்கு, என்னிடம் பணிபுரியும் சில நபர்களையும் என் நண்பர்கள் இருவருமாக, மொத்தத்தில் எட்டு பேராகச் சென்றோம். மணி காலை எட்டு. எனக்கு வேலை தந்த முதலாளி பின்னால் பைக்கில் வந்து கொண்டிருக்கிறார். வேலையாட்கள் ஒரு இரண்டு அங்குல அளவில் ஐந்து அடி நீளம் உடைய பைப்புகள் மூன்றும், ஐந்து அடி நீள, நான்கு இன்ச் சதுரக் கட்டைகள் மூன்றும் கடப்பாரைகள் இரண்டுமாக ஆட்டோ மற்றும் பைக்கின் மூலமாக வந்து மெயின் கேட்டை அடைந்தோம். நான் ஒருவன் மட்டும்  காவலாளியை அணுகி, வேலை செய்ய வந்திருக்கிறோம்; எங்களை உள்ளே விடுங்கள் என்று கேட்டேன். சற்றே வெளியில் வந்து எனது ஆட்களைப் பார்த்தவுடன், வேகவேகமாக கொஞ்சம் தள்ளி நின்றிருந்த இன்னொரு காவலாளியை அழைத்து, “இவர்களை உள்ளே விடாமல் பார்த்துக்கொள். நான் உள்ளே போய் அனுமதி கேட்டு வருகிறேன்என்று சொல்லிவிட்டு, மேலும் ஏதோதோ அந்த அடுத்தக் காவலாளியிடம் மிகவும் சத்தம் குறைத்துப் பேசிவிட்டு, அலுவலகம் உள்ளே சென்றார். அவர் கொஞ்சமாகத் திறந்திருந்த மெயின் கேட்டை, முழுவதுமாகப் பூட்டிவிட்டார். எனக்குக் கோபம் தலைக்கேறியது. “அய்யா எதுக்கு திருடங்களப் பாத்த மாதிரி நடந்துக்குறீங்க? நாங்கதான் நீங்க சொன்னவுடனே வெளியில அமைதியாத்தானே நிக்கிறோம்என்றேன்.

     அதற்கு அந்தக் காவலாளி, நிதானமாக, “நடந்தது நடந்து போச்சி; அத முடிக்க இன்னா வழின்னு பாக்காம, உள்ள இருக்கிறவனுங்களையும் மாட்டிவிடற மாதிரி, அடியாளையும் சாமான்களையும் எடுத்துகினு வந்தா பயந்துடுவாங்களா

     என்ன குழப்புறீங்க? ஏங்க நாங்க ஜெனரேட்டர் இறக்கி வைக்க வந்தவங்க; நேரமாவுது உள்ள விடுங்கன்னு சொன்னா, எதைஎதையோ சொல்றீங்க

     அதற்குள்ளாக முன் சென்ற காவலாளியும் மூன்று போலீசுமாக வந்து எங்களைச் சுற்றி வளைத்தார்கள்; முதலில் அடிக்க முனைந்தனர். நான் அவர்களிடம், சார் இங்குள்ள AE தான் எங்களை வேலை செய்ய வரச் சொன்னார்; அவரைக் கேட்ட பிறகு எந்த முடிவையும் எடுங்கள் என்று சொல்லும்போதே பொறியாளருடன் உதவி ஆய்வாளரும்  ஒன்றாக முன்கேட்டுக்கு வந்தார்கள்; அந்தப் பொறியாளர், “நான் உங்களப் பாத்ததே இல்ல. அப்படியிருக்க நான் ஏன் உங்களை வரச் சொல்ல போகிறேன்.” உதவி ஆய்வாளரைப் பார்த்து, “சார் நடந்த திருட்டுக்குச் சம்பந்தமான ஆட்களாகக்கூட இவங்க இருக்கலாம்; இல்லன்னா இரும்புத் தடியெல்லாம் எடுத்துகிட்டு வந்திருப்பார்களா?”

     சார், இங்கே என்ன நடக்குதுன்னுகூட எங்களுக்குத் தெரியாது. ஜெனரேட்டர் ஒண்ணு இறக்கி வைக்கணும்னு எங்க முதலாளி சொல்லி, அதுக்குத் தேவையான சாமான்களைத்தான் நாங்க எடுத்துகிட்டு வந்தோம். ஜெனரேட்டர் வந்திருந்தா சொல்லுங்க; வரலைன்னா உள்ளே என்ன நடந்ததோ எங்களுக்குத் தொடர்பில்லை, நாங்க கிளம்புகிறோம்.” உதவி ஆய்வாளர் அவரிடம், “ஏன் சார் நீங்க ஜெனரேட்டர் ஏதாவது ஆர்டர் போட்டீங்களா?”  எனக்கு மேல உள்ள அதிகாரிங்க போட்டிருக்கறது உண்மைதான்; ஆனா நாங்க ஆர்டர் பண்ண ஜெனரேட்டரே இன்னும் வரல; அதுக்குள்ள இவங்களை யார் அனுப்புனதுஎன் பெயரைக் கேட்டார். நான் சொன்னேன். “சார் அவர்தான் எனது முதலாளி, மேஸ்திரி. அவர் இப்ப வந்திடுவார்.” உதவி ஆய்வாளர்சரி அவர் வரும்வரைக்கும் நீங்க பக்கத்து ரூம்ல இருங்க. அவரு வரலையின்னா அப்புறம் பாருங்க உங்க கதியைஎன்று சொல்லியவாறு அலுவலத்தின் உள்ளே சென்றுவிட்டார்.

      (எனது குருபெரியவர் - நான் அடிக்கடி சொல்லும் தண்டபாணி அய்யா அவர்கள்; அவரது தொழில்முறை நண்பர் எனது சின்ன முதலாளி.) ஆடி அசைந்து வந்தார் சார். வந்தவுடன் நடந்த தகவலைச் சொல்லி எரிச்சலை ஆற்றிக்கொண்டேன். பணியில் அசகாய சூரரான அவர், வேலை இடத்தில் உள்ளூர் ஆட்களின் பிரச்சினைகளை எதிர்கொள்ளத் தயங்குவார். நாம் ஜெனரேட்டர் இறக்கும் இடம் ஒரு கம்பெனியோ அல்லது பொதுவெளியோ என்றால் அங்குள்ள சுமைதூக்குவோர் சங்கம் (சில இடங்களில் வேலைற்றதுகள்கூட நாங்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் என இல்லாத சங்கத்தை அவசரமாக உருவாக்கிக் கொள்வார்கள்) நாங்கள் தான் இறக்குவோம் உங்களது ஆட்களை அனுமதிக்க மாட்டோம் என்பார்கள். சரி, அவர்களே செய்யட்டும் என்றாலும், அந்த விலை நமக்கு ஒத்துவராது. அதன் பிறகு அவர்களைச் சமாளித்துவர என்னை அனுப்புவார். எப்போதும்போல, “ஏம்பா, நீயே பேசவேண்டியதுதானேஎன்றார். AE உள்ளதான் இருக்காரு போய்ப் பேசுங்க என்றேன் நான்.

     அங்கே சென்றவுடன் தான் பிரச்சினைக்கான காரணம் புரிந்தது. உதவிப் பொறியாளர்: நீங்கதானே மேஸ்திரி; நீ முன்னாடி வராம அறிமுகமே இல்லாத உங்க ஆட்களை மட்டும் அனுப்பினா, அதுவும் இங்க நடந்த விஷயத்துக்கு யார் என்னன்னு நினைக்கிறது என்றார். செக்யூரிடி நீ என்ன யாருன்னுகூட சரியா விசாரிக்காம, நீயும் குழம்பி, எங்களையும் குழப்பி விட்டுட்ட என்று ஏசினார்.

     அவரோ, ஆபீஸ்ல போலிஸ் பிடிச்ச ஆளுங்கள்ல ஒருத்த தப்பிச்சு ஓடுனப்ப போய் ஊருக்காரங்களைக் கூட்டிட்டு வரன்னு சொல்லி ஓடினான். அவந்தான் தடியெல்லாம் எடுத்துகிட்டு அடியாளொட வந்திட்டான்போலன்னு எச்சரிக்கையா வந்து சொன்னேன். இது தப்பா சார்?

     எல்லாம் புரிந்தது. தொலைதொடர்பு கட்டிடம் விரிவு படுத்தும் வேலையின்போது, முதல்நாள் அதிகாலையில் விலை மிகுந்த பிளம்பிங் குழாய் வால்வுகள் போன்றவற்றை யாரோ திருடும் சமயம் பிடிபட, சிக்கியவர்களில் தப்பிச் சென்ற ஒருவன் தான், தனது ஆட்களைக் கூட்டி வருகிறேன் எனச் சொல்லி ஓடியிருக்கிறான். இதன்பின் போலிஸ் வந்து விசாரித்துக் கொண்டிருக்கும் வேளையில், நாங்கள் கடப்பாரை மற்றும் தடிகளை ஆட்டோவில் எடுத்து வரவும், செக்யூரிடி பயந்துபோய் உள்ளே சென்று தகவல் தரவும் சரியாக இருந்தது. பிறகு எங்களை மாடிக்குச் செல்லக்கூடாது எனும் நிபந்தனையுடன், கீழ்தளத்தில் ஜெனரேட்டர் நிறுவும் இடத்தைக் காட்டினார் உதவுப் பொறியாளர்; உதவி ஆய்வாளர், எதற்கும் எங்களது விலாசத்தை செக்யூரிடியிடம் கொடுத்துவிட்டுப் போகச் சொன்னார்.

     சரி, ஜெனரேட்டர் வரவில்லை எனவே வீட்டுக்குக் கிளம்பலாம் என்று முடிவுசெய்து, மேஸ்திரியிடம், நாங்கள் மதிய உணவுக்குப் போய்விட்டு, ஓட்டலில் இருந்து வெளியில் வந்தால் வாசலில் மேஸ்திரி  நிற்கிறார்; ஜெனரேட்டர் வந்துவிட்டதாம்; சரியென எல்லோரும் பணியிடத்துக்குச் சென்றாலும் சிலர் கடமைக்காகவே சென்றனர்; காரணம், மணி இப்போதே மூன்று. சின்ன முதலாளியும் பதட்டத்துடன் இன்று துவக்க நிலைப் பணிகள் முடியுமோ இல்லை நாளையும் வரவேண்டியிருக்குமோ என்று கவலையுடன் வந்தார்.

     ஜெனரேட்டர் காப்புப் பலகைகள் பிரிக்கப்படாமல் க்ரேன் வண்டி வரவழைக்கப்பட்டு, லாரியிலிருந்து கீழே இறக்கினோம். கொண்டுவந்த தளவாடங்களை வைத்து பத்து மீட்டர் தொலைவில் இருந்து தள்ளிக் கொண்டு வந்தோம். காங்க்ரீட் தளத்தின் அருகே நிறுத்தி, அதைச் சுற்றி இருந்த முக்கால் மீட்டர் அகலத்துடன் ஒரு மீட்டர் ஆழம் கொண்டுள்ள கேபிள் ட்ரென்ச் உள்ளது. அதைக் கணக்கிட்டு ஜெனரேட்டரை நகர்த்த ஆரம்பித்தோம். முன் பக்கமுள்ள ட்ரென்ச்சிலும் ஜெனரேட்டர் இறங்கிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பின்பக்கம் மற்றும் இரு பக்கவாட்டிலும்கூட அப்படியே.  என்ன நினைத்தாரோ சின்ன முதலாளி சுவரை ஒட்டிய கேபிள் ட்ரென்ச் பக்கமே கையை நீட்டி நீட்டி, இப்படி அப்படி நகர்த்தச் சொல்ல, நான், முதலாளி, உங்க அளவைக் குடுத்த பின்னால் நீங்க ஏன் இடையில் நின்று கொண்டு கையை நீட்டுகிறீர்கள்; கொஞ்சம் சாய்ந்தாலும் ரேடியேட்டர் பகுதி சுவரில் மோதி, உங்கள் கையை வெட்டக்கூடும். ஆனால் அவரது பதட்டத்துக்கிடையே எதையும் காதில் வாங்கவில்லை; சுவற்றை நோக்கித் தள்ளியவர்கள் சற்றே அதிகமாக சுவர் பக்கம் தள்ள, ட்ரென்ச்சின் மட்டம் கிடைக்காமல் என்ஜின் சாய சில நொடிகள் அசந்து பார்க்கிறேன்; சின்ன முதலாளி தனது கையை எப்போது எப்படி எடுத்தார் எப்படித் தப்பித்தார் என்று கலவரத்தில் ஆழ்ந்தேன். அவரோ அதை சற்றும் பொருட்படுத்தாமல், என்ன ராஜேந்திரா நான்தான் உன்னை அவர்களைக் கவனி என்று சொன்னேனே இப்போது பார் எஞ்சின் சுவரில் சாய்ந்துவிட்டது எனக் கத்துவதைத் தொடர்ந்தார். எனக்குக் கோபம் தலைக்கேறிவிட்டது. தயவு செய்து நீங்க அறையைவிட்டு வெளியே நில்லுங்கள்; வேலை முடிந்தவுடன் வந்து, எவ்வளவு முன்பின் செல்ல வேண்டும் என்றால் அதை நாங்கள் சரி செய்து தருகிறோம்; நீங்கள் குறுக்கீடு செய்துகொண்டே இருந்தால் நாங்கள் கிளம்புகிறோம். வேண்டுமானால் நாளை வருகிறோம் எனச் சொன்னதும், அவருக்கும் ஒரு மாதிரியாகி வெளியேறி, வேலை முடிந்தவுடன் அளவெடுத்து ஒப்புதல் தந்தார். மறுநாள் முன்பணம் தரும் வேளையில் அவர் என்னிடம் கேட்டது, “ஏன் இவ்வளவு கோபப்படுகிறாய்?” “

     உங்கள் கவனம் முழுவதும் பணியில் வேகத்துடன் இருந்ததே தவிர, பாதுகாப்புடன் செய்ய வேண்டும் என்பதில் இல்லை; நேற்று உங்கள் நிலை இப்படி ஆனதுஎன்றேன். அவர் இவ்வளவு காலத்திற்குப் பிறகும் அப்படி ஒன்று நடந்ததாகவே காட்டிக்கொள்ள மாட்டார்.

      ஒருமுறை ஜெனரேட்டர் ஒன்றை எங்கள் கம்பெனி மின்சாரம் இல்லையென்றால் தானியங்கி முறையில் எஞ்சின் ஸ்டார்ட் ஆக செட்டிங் செய்து ஜெனரேட்டரை இயக்கிக் கொண்டிருந்தோம். அந்த சமயத்தில் மும்முனை மின்சாரப் பேனலில் உள்ளே இருந்து ஏதோ சத்தம் வருகிறது. திருப்பு உளி (Screw driver) இரண்டடி நீளத்தில் உள்ளதை எடுத்து, திறந்து வைத்திருந்த பேனல் ஒன்றின் கதவு வழியே செருகி சரி செய்ய எத்தனித்தார் சின்ன முதலாளி. அருகே இருந்த எங்கள் கம்பெனி பொறியாளர், நீங்க செய்யறது தப்பு; ஷாட் சர்க்யூட் ஆகிவிடும் என்று எச்சரிக்கை செய்யும்போதே, அது ஒரு சின்ன வேலைதான் எதுவும் ஆகாம நான் பாத்துக்குறேன் என்றார் சின்ன முதலாளி. சொருகினார்: சில நொடிகளில் பேனல் பெரிய வெடிச் சத்தத்துடன் அறை முழுதும் புகைமண்டலமாகி வெளியில் ஓடக்கூட வழி தெரியாத இருட்டு. அவ்வளவுதான் எல்லாம் முடிந்தது என எங்கும் நகராமல் இருந்தபோது, தரைதளத்தில் இருந்த பெரிய முதலாளி சத்தம் கேட்டு மின்சாரத்தை நிறுத்திவிட்டு, பேஸ்மென்டில் இருந்த எங்களை நோக்கி வாட்ச்மேன்களோடு டார்ச்சையும் எடுத்துக்கொண்டு வரவும் கொஞ்சம் புகை விலகத் துவங்கியது. உற்றுப் பார்த்தால் நான் ஒரு மூலையில், பொறியாளர் ஒரு மூலையிலுமாக இருந்தோம்; உடனே நாங்கள் இருவரும் கேட்ட கேள்வி. சின்ன முதலாளி திருப்புளியில் வேலையாக இருந்தாரே அவர் எங்கே? என்னவானார்?

     மேலே தரை தளத்திலிருந்து ஒரு குரல்

     அட சீக்கிரமா வெளியில வாங்கைய்யா! அங்க என்ன செய்றீங்க? சின்ன முதலாளி சங்கநாதம் செய்தார்.” இவர் எப்போது, எப்படி மேலே போனார்? அதுதான் சின்ன முதலாளி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக