அன்பான நண்பர்களுக்கு! நாவல்கள் படிப்பதில் விருப்பமுள்ளவன் நான் என்பது தாங்கள் அனைவரும் அறிந்ததே! அதிலும் மலையாள மொழிபெயர்ப்புகளை அதிகம் விரும்பிப் படிக்கிறேனோ அல்லது அதுதான் எனக்கு அமைகிறதா என்பது எனக்குத் தெரியாது. முண்டஸ்ஸேரி, தகழி, சேது, உரூப், முகுந்தன், பஷீர், பொற்றேகாட், கே.பி.கேசவதேவ், அச்சுதன் மாங்காடு, பாலச்சந்திரன் சுள்ளிக்காடு, பத்மராஜன் & கேசவ மேனன் இன்னும் பலரையும் வாசித்து வருகிறேன்.
நடைபெற்றுவரும் புத்தகக் காட்சியில் என்னவோ ஒரு ஈர்ப்பு எதிர் வெளியீட்டின் குறிப்பாக அனுஷ் அவர்களின் முகநூல் பதிவுகளில் மலையாளத்தின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான கே.ஆர். மீரா அவர்களின் இரண்டு நூல்களின் வெளியீட்டைப் பற்றிய அறிவிப்பைக் கண்டவுடன் அந்தப் புத்தகங்களைக் கண்டிப்பாக வாங்கிப் படிக்க ஆவல் ஏற்பட்டது. ஆனால், நான் தலைப்பைப் பார்த்தவுடன் எனக்கேற்பட்ட உந்துதலின்படி மீராசாது (நிச்சயம் அதையும் வாங்கியிருக்க வேண்டும்; பணம்? இதையே ஆழி பதிப்பகம் சேர்ந்தவன் என்று சற்று அதிகத் தள்ளுபடியில் வழங்கினர்; இதனுடன் மேலும் நேரு மேல் இவர்களுக்கு ஏன் இவ்வளவு கோபம்? எனும் நூலையும் சேர்த்து) எனும் அந்த புத்தகத்தைத் தவிர்த்துவிட்டு,
யூதாஸின் நற்செய்தி என்னும் புத்தகத்தைத் தேர்வு செய்து வாங்கினேன்
16/1/23 அன்று.
யூதாஸின் நற்செய்தி: ஆக்கம்: கே.ஆர். மீரா.
தமிழில்:
மோ. செந்தில்குமார்.
“காட்டிக் கொடுப்பவனுக்கு ஒருபோதும் உறக்கம் வராது. பசியடங்குவதோ தாகம் தணிவதோ இல்லை. தண்ணீரில் மூழ்கிக் கிடந்தாலும் அவனுடைய உடலின் புகைச்சல் அணையாது. மூக்கு முட்டக் குடித்தாலும் அவனுடைய உணர்வு தப்பிப்போவதில்லை.”
இப்படித்தான் நாவல் துவங்குகிறது.
கே.ஆர். மீரா அவர்களின் ஒரு சிறப்பான நாவலைப் படித்த திருப்தி எனக்குள் ஏற்பட்டது. இது வழக்கமான காதல் கதை இல்லை என்பதும் ஒரு போராளியின் தியாகம் பற்றியதும் இல்லை என்று முன்னுரையிலேயே தெளிவுபடுத்தி விடுகிறார்கள். இந்திராவின் நெருக்கடிநிலை காலத்தியக் கதை. அப்போதையக் காவல் துறையின் கொடுஞ்செயல்களை
(இப்போது மட்டும் என்ன வாழ்கிறது என்று நீங்கள் கேட்பதுபோலத் தெரிகிறது.) தனது வீட்டிலேயே தனது போலிஸ்காரத் தந்தையிடம் அனுபவிக்கும் ஒரு பெண், அவளின் தாய். காவல் முகாம்களில் பணிபுரிந்து,
மிருகத்தனமான குணங்களைக் கையாண்டு அதன்பால் மனசிக்கல் கொண்ட காவலர்களால்,
வீட்டிலும் அவ்வாறே நடக்க, குடும்ப அங்கத்தினர்கள் ஒவ்வொருவராகப் பிரிய அல்லது வழிமாறிச் செல்ல மனத்தளவில் நிர்பந்தம் ஏற்படுவது வியப்பில்லைதானே!
நக்சலைட்டுகள் ஒழிப்பு எனும் பெயரில் காவல்துறையின் கொடுமையால் ஏற்படும் போராளிகளின் பிணங்கள் தன் வீட்டின் அருகில் இருக்கும் ஏரியில் இறந்த இரண்டொரு நாளில் மிதப்பதை அறிந்த பிரேமா, அந்த பிணங்களை ஏரியின் ஆழத்திலிருந்து மீட்டுக் கொண்டுவரும் தாஸ் என்பவனும் ஒரு முன்னாள் நக்ஸலைட்தான் என அறிகிறாள். கைது செய்து விசாரணைக்கு என அழைத்துச் செல்லப்படும் நபர் சில நாட்களில் ஏரியில் பிணமாக, மீன்களும் மற்றவையும் குதற, சிதைந்த நிலையில் அந்தப் பிணம் மேலே வர, அவற்றை மீட்டு கரையில் காவலரிடம் ஒப்படைக்கும் பணியினைச் செய்யும் தாஸ். வீட்டின் நிலையால் எதிர்மறை எண்ணங்கள் ஏற்பட, தாஸைக் கண்டு அவனிடம் மனதை இழக்கிறாள் பிரேமா! அவனோ, தானொரு உண்மையான போராளி இல்லை; ஒரு சமயத்தில் இயக்கத்தைக் காட்டிக் கொடுத்தவன் நான்; வாழ்வில் தூக்கம், மகிழ்ச்சி, காதல் என்பது எள்ளளவும் என்னிடம் இருக்காது என்று பல இடங்களுக்கு மாறி மாறி விலகிச் செல்கிறான். இருந்தும் அவள் அவனைக் காதலுடன் தொடர்ந்து அவன் ஏன் காட்டிக்கொடுக்கிறான்/
அவன்தான் காட்டிக் கொடுத்தானா?
அல்லது தன்மீது பழிபோட்டுக் கொள்கிறானா என்பதையும் அவனது பழைய வாழ்க்கையையும் அதில் ஏற்பட்ட நிர்பந்தங்களையும் கண்டு கொண்டு மேலும் அவனைக் காதலிக்கவே செய்கிறாள்.
ஒரு கட்டத்தில் ஓய்வு பெற்று, தனது மகள் பிரேமாவின் ஆதரவு தவிர, தனிமையில் வாழும் போலீஸ்காரத் தந்தை, ஒரு கடிதம் கொடுத்து தனது பணிக்காலத்தின் மேலதிகாரியிடம் கடிதத்தைக் கொடுக்குபடி சொல்ல, அதில் என்ன எழுதிருக்கிறது என்பதை அறிந்துகொண்ட பிரேமா, அந்த காவல் அதிகாரியைச் சந்தித்து, தனது தந்தையின் பெயரைச் சொல்லி அறிமுகம் செய்து கொண்டபோது, அவரும் உறவுகளின்றித் தான் தனியாக இருப்பதாகவும் பணியின்போது அரசின் கட்டளையை மட்டுமே நிறைவேற்றியபோதும் உள்ளம் என்னவோ குற்றவுணர்ச்சியில் தவிப்பதை தவிர்க்க முடியவில்லை என்றும், இந்தச் சூழ்நிலையில் உன் தந்தைக்கு எந்த உதவியும் செய்ய இயலாத நிலையில் இருப்பதாகவும் புலம்புகிறார். ஆனால், பிரேமா, கடைசிவரை தந்தை கொடுத்தக் கடிதத்தை அவரிடம் கொடுக்கவே இல்லை; மாறாக, ஒரு சமயத்தில் அதைக் கிழித்து எறிகிறாள். அதே நேரம் தனக்கு வேண்டப்பட்டவர்களின் தகவல்களை அவரிடம் நாசூக்காகப் பெறத் தவறவில்லை.
நக்சலைட்கள் கதையில் இடம் பிடித்தாலும் எந்த இடத்திலும் அளவுக்கு மீறிய அதிரடிகள் சினிமாத்தனங்கள் ஏதுமின்றி நாவல் செல்கிறது. தாஸ் மற்றும் பிரேமாவின் காதல் முன்னிறுத்தப்பட்டாலும் அது எல்லை மீறாத அழகுடன் விவரிக்கப் படுவதோடு, காமத்தை தள்ளி வைத்தே கொண்டாடுகிறது.
எத்தனை ரசிக்கக்கூடிய எழுத்து மீரா அவர்களுடையது என்பது இந்நாவலைப் படிப்பவர்களுக்கு ஏற்படுவது உறுதி. இறந்துபோன சுனந்தா எனும் பாத்திரம் நாவலின் வலிவை மேம்படுத்துவதாக அறிகிறேன். இந்த நாவலை ஒரு மொழிபெயர்ப்பாகவே நான் கருதவில்லை;
காரணம், இயல்பாகத் தமிழில் எழுதப்பட்ட ஒரு கதையாகவே கையமர்த்திச் செல்கிறார் மொழிபெயர்ப்பாளர் மோ.செந்தில்குமார்.
பாராட்டுகள் செந்தில்குமார் தோழர். எதிர் வெளியீட்டுக் குழுவிற்கும் எனது நன்றி!
எல்லாம் சரி, யூதாஸின் நற்செய்தி என வரும் நாவலில், உனது பதிவில் எல்லாவிடத்திலும் தாஸ் என்றுதானே நாயகன்? பெயர் வருகிறது என்கிறீர்களா?
கதையை வாங்கிப் படியுங்கள்….
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக