ஞாயிறு, 24 ஜனவரி, 2021

 

 


கறுப்பர் நகரம்

பல புத்தகக் கடைகளிலும் பாரதி புத்தகாலயத்திலும் கறுப்பர் நகரம் புத்தகத்தைப் பார்த்திருக்கிறேன். இந்தப் புத்தகத்தின் தலைப்பைப் பார்த்தவுடன், எடுத்துப் பார்க்காமலேயே, இது ஒரு தென்னமரிக்க எழுத்தாளரின் தமிழாக்கம் செய்யப்பட்ட நாவல், என்ற அளவில் முன்முடிவு செய்திருந்தேன். அதை எடுத்தும் பார்த்ததில்லை.
சில நாட்களுக்கு முன்பு கொரட்டூர் கிளை நூலகத்திற்குச் சென்றிருந்த போது, நூலகரின் மேசையில் கருப்பர் நகரம் எனும் இந்நூல் இருந்தது. அவரின் சிபாரிசின் பேரில் அதைப் படிக்கத் துவங்கினேன். இதுவரை கரன் கார்க்கி அவர்களின் ஒரு நூலையும் நான் வாசித்ததில்லை.
ஒரு சென்னை மத்திய சிறைக்கைதி தண்டனைக் காலம் முடிந்து (ஏறக்குறைய இருபதாண்டுகளுக்கும் மேல்) வெளிவந்தபோது, அவனுக்கு சென்னை புதுவிதமாகக் காட்சியளிக்கிறது. அவன் பார்த்த பல கட்டிடங்கள், பூங்காக்கள் காணாமல் போய்விட்டன. சொந்த பந்தங்கள் ஏதுமின்றி, தங்குவதற்குக்கூட ஒரு இடமின்றித் தவிக்கும் நிலையில் அவனது கடந்தகாலச் சிந்தனைகளே இந்நாவலாக வந்துள்ளது.
சென்னையின் அன்றைய சேரி வாழ்க்கையை அப்பட்டமாகப் படம் பிடித்துக் காட்டும் இந்நாவலை – ஒரு காலத்தில், நானும் எனது தாய் தந்தையருடன் அந்த அனுபவத்தை பெற்று வளர்ந்தவன் – நான் கொண்டாடுவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. அந்தச் சூழ்நிலை மற்றும் வாழ்வியலை நமது சந்ததிகள் பெறக்கூடாது எனும் எண்ணத்தில் பின்னர் எங்கள் வீடு வளர்ந்துவரும் புறநகர்ப் பகுதிக்கு மாற்றப்பட்டது. வடசென்னைப் பகுதி இன்றைக்கும்கூட 40% கூட மாற்றம் பெறவில்லை.
எஸ்.என்.செட்டித் தெரு, தேவராஜ் கிராமணி தோட்டம், காலரா மருத்துவமனை, காசிமேடு மீனவர் குடியிருப்பு, புதுப்பேட்டை, சித்ரா தியேட்டரிலிருந்து பாந்தியன் சாலை துவக்கம் போன்ற பகுதிகள் இன்றும் என் கண்முன்னால் மிகச்சிறு வளர்ச்சி மட்டுமே அடைந்த மாறுதலாகக் காண்கிறேன். இந்த மக்களின் திறந்தவெளி மற்றும் மாநகராட்சிக் கழிவறைகளின் வரலாறு சிறைத் தண்டனைகளை விடக் கொடுமையானது
செங்கேணி எனும் அந்த சிறைவாசியின் நினைவுக் காட்சிகளே இக்கதை. தந்தை பின்பு தாய் என இருவரையும் இழந்த நிலையில், உறவுகளைத் தேடி சென்னைக்கு வரும் அவனை, உறவுகளும் புறந்தள்ள, வடசென்னை சேரிப் பகுதிக்கு வந்து ஐக்கியமாகிறான் செங்கேணி. உழைப்பால் ஒரு கைவண்டி சம்பாதித்து, அதில் வந்த வருமானத்தில் குடிப்பது, சாப்பிடுவது என தனது காலத்தைத் தள்ளி வரும் வேளையில், ஆராயி எனும் பெண்ணின் மீது காதலாகி, அவளது மாமனின் எதிர்ப்புக்கிடையே, திருமணம் செய்து, பேசின்பிரிட்ஜ் அருகே சேரியில் குடித்தனம் செய்து வருகிறார்கள்; சாராயம் விற்கும் பகுதியை ஒட்டி. சேரி என்றால் குற்றவாளிகளே அதிகம் இருப்பார்கள் என்ற எண்ணத்தைக் கலைத்து அங்கும் மனிதம் உண்டு என்பதைக் காட்டும் இவர்களின் வாழ்வின் வழியே அன்றைய வடசென்னையை மட்டுமின்றி – சேரிகளை, அது மாறாமல் மையங்கொள்ள வைக்கும் அரசு மற்றும் அரசியல்வாதிகளையும் வெளிக்காட்டுவதோடு, காவல்துறையின் குற்றவாளிகளுடனான இணக்கத்தையும் சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார் நூலாசிரியர் கரன் கார்க்கி! முதன்முதலாக திரையில் இயக்குநர் துரை அவர்களின் 'பசி' படத்தில்தான் சேரிப்பகுதிகள் நிர்வாணப்படுத்தப்பட்டது என்று நினைக்கிறேன். அந்த அவலச்சுவை இந்த நாவலிலும் எனக்குக் கிடைத்தது. மூக்கைப் பொத்திக் கொள்ளாமல் வாசிக்க வேண்டிய சேரிப் புத்தகம்.
பாரதி புத்தகாலயம் வெளியீடு.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக