வியாழன், 4 செப்டம்பர், 2014

அண்ணா இறந்தபோது ஜெயகாந்தன்



அண்ணா இறந்தபோது ஜெயகாந்தன் பேசியது
அண்ணாவோ உண்மையில் கட்சியைத் தாண்டி பலருடைய நன்மதிப்பைப் பெற்றவர்.
அந்த சமயத்தில் ஜெயகாந்தன் காங்கிரஸ்காரர். காங்கிரசுக்குக்காக அவர், நா.பார்த்தசாரதி, சிவாஜி கணேசன், சோ ராமசாமி, கண்ணதாசன் மாதிரி கலை இலக்கிய நாடக உலக பிரபலங்கள் எல்லாம் காங்கிரசின் பிரச்சார பீரங்கிகள். பேச்சாற்றல், இல்லாவிட்டால் சினிமாக்கார கரிஸ்மா எதையாவது வைத்து அவர்களுக்கும் கூட்டம் வந்தது.
அண்ணா நோய் தாக்கி இறந்து போனார். நாகரிகம் கருதி அது நாள் வரை எதிர்த்தவர்கள் கூட அவரை ஆஹா ஓஹோ என்று புகழ்ந்தார்கள். கண்ணதாசன் மாதிரி அண்ணாவுடன் பழகியவர்கள், அண்ணாவின் தாக்கத்தை நேரடியாக அனுபவித்தவர்கள் காங்கிரஸ் “சார்பாகவே” அவருக்கு அஞ்சலி கூட்டம் நடத்தினார்கள். ஜெயகாந்தன் அங்கே சிங்கம் போல போயிருக்கிறார். இறந்துவிட்டார் என்பதற்காக இது நாள் வரை நான் அவரைப் பற்றி சொன்னதெல்லாம் வாபஸ் வாங்க முடியாது, அவருடைய வழிமுறைகளுக்கு நான் எப்போதும் எதிரி, அவர் மீது எனக்கு இருந்த விமர்சனங்கள் எல்லாம் அவர் இறந்துவிட்டதால் மறைந்துவிடாது, நாகரீகம் கருதி அவரது குறைகளை இந்த சமயத்தில் பெரிதாக சொல்லாமல் இருப்பது வேறு, அவரிடம் குறையே இல்லை என்று பேசுவது வேறு என்று முழங்கி இருக்கிறார். இட்லிவடை தளத்தில் அவரது பேச்சை போட்டிருந்தார்கள். அதைப் பற்றி அப்போதே எழுத கை வரவில்லை. அவரது பேச்சிலிருந்து சில பகுதிகள்:
"இறந்துபோன ஒருவரைப் பற்றி அவர் நமது எதிரியாக இருந்தாலும் நாலு வார்த்தை நல்லதாகச் சொல்ல வேண்டும் என்பதை நானும் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் அரசியல் நோக்கம் கருதி வரப் போகும் தேர்தலை மனத்துள் கொண்டு தமிழகத்தில் ஒரு மாயையை உருவாக்குகிற மாரீசத்தனத்தைத் தி.மு.க. தொடர்ந்து செய்வதற்கு அண்ணாதுரையின் பிணத்தையும், அந்தச் சமாதியையும் பயன்படுத்துவதை, பயன்படுத்தப் போவதை அனுமதிப்பது நாகரிகமும் அல்ல; நல்லதும் அல்ல. சமூக ரீதியாக, கலாசார ரீதியாக, அரசியல் ரீதியாக அண்ணாதுரை இருந்தாலும் எனக்கு எதிரிதான்; இறந்தாலும் எனக்கு எதிரிதான். தனிப்பட்ட முறையில் அவர் எனக்கு எதிரியும் அல்ல; நண்பரும் அல்ல. அவரைப் பற்றிய எனது முடிவுகளை ஒரு தனி மனிதனின் மரணத்தின் பொருட்டு நான் கைவிட முடியாது.
அண்ணாதுரையின் மறைவினால் அவர் இந்திய அரசியலில் பிரிட்டிஷ்காரர்களின் கையாளாக நமக்கு அறிமுகம் ஆனவர் என்ற உண்மை மறைந்துவிடுவதில்லை. நாத்திகம், சமூக சீர்திருத்தம் என்ற அசட்டுத்தனங்களில் சிக்கி நமது இலக்கியங்களையும், புராணங்களையும், ஹிந்து சமயத்தையும் பாமரத்தனமாக விமர்சனம் செய்து பாமரர் மத்தியில் புகழடைந்தார் என்கிற உண்மையும் மறைந்து விடாது. அவர் எழுதிய குப்பைப் புத்தகங்களெல்லாம் அவரது மரணத்தை எருவாகக் கொண்டு குருக்கத்திப் பூக்களாய் மலர்ந்துவிடப் போவதில்லை. அவர் சம்பந்தப்பட்ட எல்லாமே இரவல். இரவலே ஆயினும் அதை அவர் ஒப்புக் கொள்ளாததால் அது இலக்கியத் திருட்டு. அதற்கும் மேல் அவரது இரவல் சரக்குகள் எத்தகையது என்பதை அறிகிற பொழுது, அவரது தரம் மிகவும் தாழ்ந்தது என்கிற உண்மையையும் இந்த மரணம் வந்து மறைத்துவிடப் போவதில்லை.
அவரை அறிஞர் என்று மூடர்களே அழைக்கலாயினர். அவரைப் பேரறிஞர் என்றூ பெருமூடர்களே அழைக்கலாயினர். நகைச்சுவை எழுத்தாளர் என்று பெயரெடுத்திருந்த கல்கி அவர்கள் பத்திரிகையில் எழுதிய ஒரு நாடக விமர்சனத்தில் அண்ணாதுரையை பெர்னாட்ஷா என்று வஞ்சப் புகழ்ச்சி செய்திருக்கிறார். தமிழர்களே! உங்களுடைய தற்காலத் தகுதிக்கு இவர்தான் பெர்னாட்ஷா என்பதாகவே அதை நான் புரிந்து கொண்டேன்.
பாமரத்தனமான நாடகங்களும், மெளடாகத்தனமான பகுத்தறிவு வாதங்களும், தமிழறிவில்லாத, ஆனால் தமிழார்வமுடைய மக்களின் மூடத் தமிழ்ப் பற்றினாலும் பார்ப்பன எதிர்ப்பு என்னும் ஓர் அநாகரிக நடைமுறையினாலும், காங்கிரஸ் எதிர்ப்பு, வடவர் எதிர்ப்பு என்னும் கொச்சை அரசியலினாலும் ஏதோ ஒரு ஜனக்கும்பலை வசீகரிக்கிற அண்ணாதுரை எனது கவனத்தைக் கூடத் தன்பால் இழுத்ததில்லை"…
Like                                                                                                                                                     
                                                                                                                                                           Guru Manutd

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக