புதன், 18 ஜூன், 2014

வளர்ந்த நாட்கள்!

     1977-ல் சென்னை பச்சையப்பன் கல்லூரிப் பள்ளியில் (என்.எஸ்.சி.போஸ் சாலை,பூக்கடை) நான் ஒன்பதாம் வகுப்பில் படித்தபோது எனது வகுப்பிற்குத் தமிழாசிரியராகப் பாடம் நடத்தியவர் புலவர் முத்து குமாரசாமி என்பவராவார். இவர் ஒரு நல்ல ஆசிரியராகக்கூட இருந்திருக்கலாம்; ஆனால், அவ்வருடத் தொகுப்பில் அவரிடம் நாங்கள் மாட்டிக்கொண்டோம்; கவிதை, செய்யுள் போன்ற பாடத்திற்கு மட்டுமே பாடம் நடத்திய அவர் தான் ஒரு சீனியர் என்ற எண்ணத்துடன், மாணவர்களுக்கு புரிகிறதோ இல்லையோ தன் கடமையை முடித்துவிட்டு, பேச்சின் நடுநடுவே, அந்த நாளில் எங்களுக்குக் கலைஞரைப் பிடித்திருந்தாலும்கூட,எரிச்சல் ஏற்படும் அளவிற்கு 45 நிமிட வகுப்பில் தினமும் ஐந்து நிமிடம் கலைஞரைப் புகழ்ந்துவிட்டு, ஐந்து நிமிடம் எம்ஜியாரைத் திட்டிவிட்டுத்தான் செல்வார்! தமிழ் உரைநடை ஆசிரியர் சண்முகம் மிகவும் எளிமையானவர் - புத்தகத்தில் உள்ளதை நீங்களே படித்துக்கொள்ளுங்கள் என்பதைச் சொல்லாமல் சொல்லுவார். ஆனால், பத்தாம் வகுப்பில் எங்களுக்கு வாய்த்த தமிழாசிரியர் நல்ல நகைச்சுவையாளர்; சிறப்பாக வகுப்பை நடத்திச் செல்பவர்; என்றாலும் மிகக் கண்டிப்பானவர்; ஒருவரும் ஏமாற்ற முடியாது. மதிப்பெண்கள் மட்டுமே முக்கியம் என்பவரல்ல; இருப்பினும் நல்ல மதிப்பெண்களுடன் எங்களைத் தேறவைத்தவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக