புதன், 18 ஜூன், 2014

விவேகமற்ற விவேக்!


புகைப்படம்: தவறான தமிழ் விரோத செய்தியை வெளியிட்ட நடிகர் விவேகுக்கு தமிழர் பண்பாட்டு நடுவம் கண்டனம் !  

இன்று 13/06/2014 காலை 98.3 பண்பலையில் நடிகர் விவேக் அவரது ரசிகர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவர் தவறான செய்தி ஒன்றை நேரலையில் பதிவு செய்தார். அவர் கூறியதாவது , சமஸ்க்ரித மொழியில் இருந்து தான் உலக மொழிகள் எல்லாம் பிறந்தன. தமிழும் சமஸ்க்ரித மொழியில் இருந்து தான் பிறந்தது என்று பிழையான செய்தியை வெளியிட்டு தமிழ் மொழியை இழிவு செய்துள்ளார். 

இந்தத் தாய் அவளுடைய பிள்ளைக்கு பிறந்தவள் என்று சொல்வது போல் உள்ளது நடிகர் விவேக்கின் கூற்று . விவேக் அவர்களுக்கு மொழி குறித்த அறிவோ, தமிழ் மொழி வரலாறோ தெரியவில்லை எனில் அதை பற்றி பேசக் கூடாது. 2004 ஆம் ஆண்டு தமிழ் மொழி இந்தியாவின் முதல் செம்மொழி என்ற தகுதியை பெற்றது. செம்மொழி ஆகுவதற்கு பல்வேறு தகுதிகள் வேண்டும் . அதில் ஒன்று பிறமொழிகளின் துணையில்லாமல் தானே தனித்து நிற்கும் திறன் இருக்க வேண்டும் என்பது தான். இந்திய மொழிகளில் தமிழுக்கு மட்டுமே அந்த சிறப்பு உள்ளது . இதை அமெரிக்க பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் என்பவர் உறுதிபட கூறியுள்ளார்.

மேலும் தமிழ் தான் உலக மொழிகளுக்கெல்லாம் தாய் மொழியாக விளங்குகிறது என்பதை தேவநேய பாவாணர் போன்ற பன்மொழி அறிஞர்கள் நிரூபித்து உள்ளனர். தமிழின் தாக்கம் கண்டம் விட்டு கண்டம் சென்றுள்ளதை உலக மொழிகளில் பார்க்க முடிகிறது . ஜப்பானியர்களும் , கொரியர்களும் அவர்கள் மொழியில் தமிழின் தாக்கம் உள்ளது என்பதை எடுத்துக் கூறுகின்றனர். இந்திய அளவில் அதிக கல்வெட்டுக்களும், வரலாற்றுக்கு முந்தைய எழுத்துருக்களும் காணப்படுவது தமிழ் மொழியில் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. கல் தோன்றி மண் தோன்றா காலத்து முன் தோன்றிய மூத்த குடி தமிழ்க் குடி என்று தமிழினத் தொன்மையை  தமிழ் இலக்கியங்கள் பறை சாற்றுகின்றன . 

அப்படி ஒரு தற்சார்புள்ள, தனித்துவமான தமிழ் மொழியை சமஸ்க்ரித  மொழிக்கு பிறந்த மொழி என்று தமிழரான விவேக் கூறியுள்ளது வேதனையானது , கண்டனத்திற்கு உரியது . இவ்வாறு தவறான செய்தியை வெளியிட்ட நடிகர் விவேக் தனது தவறை திருத்திக் கொண்டு பகிரங்கமாக மன்னிப்பும் கேட்க வேண்டும் என தமிழர் பண்பாட்டு நடுவம் கேட்டுக் கொள்கிறது. இனி வரும் காலங்களில் விவேக் தனது படங்களிலோ , பொது ஊடகங்களிலோ இது போன்ற பிழையான தமிழ் விரோத செய்தியை வெளியிட்டு தமிழ் மக்களை புண்படுத்த  வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்கிறோம். 

தமிழர் பண்பாட்டு நடுவம்



பட  உதவி :  இராசகுமார் 

தனித்து இயங்கக்கூடியதும், காலத்தில் பழமையானதுமான மொழிகள்  உலகிலே இலத்தீன், ஹீப்ரு,தமிழ்,சமஸ்கிருதம்,சீனம்,அரபி போன்றவைதான்! அதனால்தான் அவை ஆறு மொழிகளும் செம்மொழி என சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே மொழித்துறை அறிஞர்கள் வகைப்படுத்தி வைத்திருந்தனர்; ஆனால் இன
்று அப்படிப்பட்ட தமிழ்மொழிக்கு சிறப்பு வசதிகள் பெற்றுத்தர முயன்ற சில அறிஞர்களைக் கைகூலியாக்கிவிட்டு, தமிழை தாங்களே கண்டுபிடித்தது போலவும் அதை மத்திய அரசில் பதிவு செய்து செம்மொழியென ஆக்கியதாகவும் பலநூறு கோடிகளைச் சுருட்டி அதற்கொரு மாநாடு நடத்தினார்கள்; அப்போது ஏற்கனவே செம்மொழியான தமிழை, அறிஞர்கள் செம்மொழியென அழைத்தத் தமிழை "நீ யாரடா புதியதாக செம்மொழி என அறிவிக்க" என்று எவனும் கேட்கவில்லை! கூடித் தாளமிட்ட கும்பல்தான் அதிகம். இன்று தமிழிலிருந்து பிறந்த மொழிகளெல்லாம் நாங்களும் எமது மொழிக்கும் செம்மொழி அந்தஸ்து கொடு ; எமது மொழியும் செம்மொழி தான் என கேட்கின்றன. இனி மத்திய அரசில் ஒரு மொழியின் உறுப்பினர்கள் அதிகமாக தாக்கத்தை உண்டாக்குவார்கள் எனில் அந்த மொழி தகுதியில்லாவிட்டாலும் செம்மொழி என அறிவிக்கப்படும்.அதனால்தான் இன்று அரைவேக்காடுகளெல்லாம் தனக்கும் தமிழைப் பற்றி அதிகம் தெரியும் என மார்தட்டி பேட்டி கொடுக்கிறார்கள். இது விவேக்கின் அறியாமை அல்ல; சுரணையற்றத் தமிழ்க் கூட்டம் என்ன புளுகினாலும் ஏற்றுக் கொள்ளும் என்கிற இறுமாப்பு!

                                                                                                                   -தங்க.இராசேந்திரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக